நாடுதழுவிய ஹர்த்தால்; நாளை முடங்கவுள்ள சிறிலங்கா! - 2000 தொழிற்சங்கங்களுக்கு மேல் ஆதரவு!
சுகாதாரம், போக்குவரத்து, ரயில், மின்சாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகள் உட்பட 2000 க்கும் மேற்பட்ட குழுக்கள் அடங்கிய சிவில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் நாளைய ஹர்த்தாலில் பங்கேற்க உள்ளன.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக இலங்கையில் நாளை (06) நாடளாவிய ரீதியில் 24 மணித்தியால ஹர்த்தாலை முன்னெடுக்க பல தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் திட்டமிட்டுள்ளன.
அரசாங்கமும் அரச தலைவரும் பொதுமக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து நாளைய தினத்திற்குள் நடவடிக்கை எடுக்கத் தவறினால் எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி முதல் தொடர் ஹர்த்தாலாக மாற்றப்படும் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் எச்சரித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு ஆதரவாக லொத்தர் வியாபாரிகள் நாளை தமது கடமைகளில் ஈடுபடுவதைத் தவிர்ப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசிய சுயதொழில் வர்த்தக சங்கம் இன்று முற்பகல் தெரிவித்துள்ளது. இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் கிரிஷான் மரம்பகே, நாட்டில் லொத்தர் வியாபாரிகள்/ முகவர்கள் லொத்தர் விற்பனையில் ஈடுபடமாட்டார்கள் எனக் குறிப்பிட்டார்.
இதேவேளை, தொடருந்து தொழிற்சங்கம் இன்று (05) நள்ளிரவு முதல் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.
பல தொழிற்சங்கங்கள் இணைந்து நாளை நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கவுள்ள ஹர்த்தாலுக்கு ஆதரவாக இன்று (5) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்துகளை இயக்குவதில் இருந்து விலகுவதற்கு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கமும் தீர்மானித்துள்ளது. இலங்கையில் தற்போது கடுமையான டீசல் தட்டுப்பாடு நிலவுவதாகவும், இதனால் பொதுப் போக்குவரத்தின் செயற்பாடுகள் பாதிக்கப்படுவதாகவும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.
வங்கித் துறையுடன் தொடர்புடைய தொழிற்சங்கங்கள், இலங்கை மின்சார சபை, இலங்கை போக்குவரத்து சபை மற்றும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் ஆகியோரும் ஹர்த்தாலில் பங்கேற்க உள்ளனர்.
அனைத்து மத வழிபாட்டு தலங்களும் காலை 08.30 மணி முதல் 09.00 மணி வரை ஒலிபெருக்கி மூலம் பிரார்த்தனைகளை நடத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஹர்த்தால் மற்றும் ஏனைய பொதுப் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் வன்முறையில் ஈடுபடுவதையோ அல்லது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதையோ தவிர்க்குமாறு தொழிற்சங்கங்கள் கேட்டுக்கொண்டுள்ளதுடன், அமைதியான முறையில் தொடருமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.