சஜித் தலைமையில் பாரிய ஆர்ப்பாட்டம்: தாக்குதலுக்குள்ளான முன்னாள் எம்.பி
புதிய இணைப்பு
சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் இன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது நீர்த்தாரை பிரயோகத்துக்கு உள்ளான கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபர் ரஹ்மான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஹர்ஷ டி சில்வா இதனை உறுதிப்படுத்தியுள்ளதோடு, அவசர சிகிச்சைப் பிரிவில் முஜிபர் ரஹ்மான் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்றாம் இணைப்பு
கொழும்பு பொது நூலகத்திற்கு அருகாமையில் ஐக்கிய மக்கள் சக்தியால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி கலைக்கப்பட்டதில் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இராண்டாம் இணைப்பு
சிறிலங்கா அரசாங்கத்தை எதிர்த்து ஐக்கிய மக்கள் சக்தியால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியின் மீது நீர்த்தாரை பிரயோகம்மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள், ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு எதிராக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த நீர்த்தாரை பிரயோகத்தை மீறி, ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
ஐக்கிய மக்கள் சக்தியால் இன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு நகர மண்டபம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மற்றும் புதிய வரிகள் அறிமுகப்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு நகர மண்டபம், லிப்டன் சுற்றுவட்டாரத்தில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணியொன்றை முன்னெடுத்தது.
கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அதன் உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம் மரிக்கார், ஹிருணிக்கா பிரேமசந்திர உள்ளிட்ட பலர் இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டிருந்தனர்.
நீர்த்தாரை பிரயோகம்
இதன் போது, மின்சார கட்டணத்தை குறை, பெறுமதி சேர் வரியை குறை, அரசாங்கத்தை விரட்டியடிப்போம் உள்ளிட்ட பல பதாகைகளை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளதுடன், காவல்துறையினர், இராணுவத்தினர் மற்றும் கலகத்தடுப்பு பிரிவினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், நீர்த்தாரை பிரயோக வண்டிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.