தலைமன்னாரில் திறந்து வைக்கப்பட்ட மலையகம் 200 நினைவுத்தூபி
மலையகம் 200 நடைபயணத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று(28) மாலை 5 மணியளவில் தலைமன்னாரில் ஆரம்பமானது. தலைமன்னாரிலிருந்து மாத்தளை வரை நடைபயணமாக சென்று மலையக மக்கள் குடியேறியமையை நினைவு கூரும் முகமாக இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது தலைமன்னார் கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்ட மலையக மக்கள் இலங்கையில் கால் பதித்து 200 ஆண்டுகள் நிறைவின் நினைவுத்தூபி வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
200 ஆண்டுகள்

இந் நினைவுத்தூபியை சர்வமத தலைவர்கள் சுடர் ஏற்றி மலர் தூவி திறந்து வைத்ததுடன், பொதுமக்கள் மலர் தூவி நினைவேந்தலை மேற்கொண்டு அங்கிருந்து ஊர்வலமாக தலைமன்னார் புனித லோறன்சியா ஆலயத்தை சென்றடைந்து அங்கு ஆரம்ப நிகழ்வுகள் ஆரம்பமானது.
இதை அடிப்படையாக வைத்து இன்றிலிருந்து (29) ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி வரை தலைமன்னாரிலிருந்து மாத்தளை வரையிலான ஒரு நடைபயணத்தை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று(29) காலை தலைமன்னார் புனித லோரன்ஸ் ஆலயத்தில் இருந்து நடைபவனி ஆரம்பமாகி18 கிலோ மீற்றர் தூரம் நடைபயணமாக புறப்பட்டு பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் தங்குவார்கள் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
