முத்தையன்கட்டில் கொல்லப்பட்ட இளம் குடும்பஸ்தர் : குற்றச்சாட்டை மறுக்கும் இராணுவத்தினர்
முல்லைத்தீவு (Mullaitivu) - முத்தையன்கட்டு குளத்தில் கபில்ராஜ் என்ற இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளமைக்கும் இராணுவத்திற்கும் தொடர்புள்ளதாக தெரிவிக்கப்படுவதை இராணுவத் தலைமையகம் மறுத்துள்ளது.
இராணுவத்தின் மீதான இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எந்த அடிப்படையும் இல்லை என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே (Varuna Gamage) தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஒட்டிசுட்டான் - முத்தையன்கட்டு வீதியில் உள்ள முகாமில் உள்ள படையினர் ஓகஸ்ட் ஏழாம் திகதி இரவு நபர்கள் சிலர் முகாமிற்குள் நுழைய முற்பட்டதை தடுத்து நிறுத்தினார்கள் என இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மூன்று படையினர் கைது
படையினர் அவர்களில் ஒருவரை கைதுசெய்தனர் ஏனையவர்கள் தப்பியோடிவிட்டனர், நாங்கள் அவர்களை துரத்திச்செல்லவில்லை என இராணுவ பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இராணுவ தலைமையகத்தின் உத்தரவின் பேரில் குறிப்பிட்ட இராணுவ முகாமை சேர்ந்தவர்கள் காவல்துறையினருக்கு உரிய ஒத்துழைப்பை வழங்கினார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று படையினர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் இருவர் முகாமிற்குள் நுழைந்தவர்களுக்கு ஒத்துழைத்த குற்றச்சாட்டின் பேரிலும், மற்றவர் அவர்களைத் தாக்கிய குற்றச்சாட்டின் பேரிலும் கைது செய்யப்பட்டதாகவும் எவரும் கபில்ராஜின் உடல் மீட்கப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்படவில்லை எனவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இராணுவ பேச்சாளர்
சிங்கரெஜிமன்டின் 12வது படையணி மூலம் இந்த முகாம் நிர்வகிக்கப்படுவதாகவும் ஓகஸ்ட் ஏழாம் திகதி இரவு கைதுசெய்யப்பட்டவரை பின்னர் அவரது பெற்றோர்களிடம் ஒப்படைத்துவிட்டதாக இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
பல உள்நோக்கம் கொண்ட சக்திகள் இந்த விடயத்தை பயன்படுத்த முயல்கின்றன எனவும் ஆனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அந்த முகாமை சேர்ந்தவர்களுடன் சிறந்த உறவை பேணுகின்றனர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இராணுவத்தினரால் கைவிடப்பட்ட பொருட்களை எடுத்துச்செல்வதற்காக சிலரை அழைத்த பின்னர் இராணுவத்தினர் அவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டார்கள் என தெரிவிக்கப்படுவதை மறுத்துள்ள இராணுவ பேச்சாளர் இது முற்றிலும் பொய் எனவும் தவறு செய்தவர்களைக் கையாள இராணுவம் தயங்காது எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
