மட்டக்களப்பில் ஆணின் சடலம் மீட்பு - பொது மக்களிடம் உதவி கோரும் காவல்துறையினர்
மட்டக்களப்பு தலைமையக காவல்துறை பிரிவிற்குட்பட்ட பார் வீதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பார் வீதியில் உள்ள நீர் நிலையொன்றிலேயே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், சுமார் 60 வயது மதிக்கத்தக்க நபரை அடையாளம் காண்பதற்காக உதவி புரியுமாறு மட்டக்களப்பு காவல்துறையினர் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று (10) காலை அப்பகுதி மக்கள் குறித்த சடலத்தைக் கண்டு காவல்துறையினருக்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து மட்டக்களப்பு காவல்துறையினர் அச்சடலத்தை மீட்டுள்ளனர்.
தொடர்ச்சியான துர்நாற்றம்

இதேவேளை, பார்வீதி பகுதியில் தொடர்ச்சியாக துர்நாற்றம் வீசி வருவதால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உட்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு பார் வீதியில் அமைந்துள்ள நீரோடை அருகே நாய் ஒன்று இறந்து கிடந்துள்ளதாலும் நீரோடை பகுதியில் மீன் கழிவுகள் கோழி கழிவுகள் குப்பை பொருட்கள் சுற்றாடலை பாதிக்கும் வகையிலான துர்நாற்றம் வீசக்கூடிய பொருட்களை அப்பிரதேசத்தில் கொண்டு வீசுவதனால் குறித்த பகுதியால் செல்லும்போது துர்நாற்றம் வீசுவதாக அறிய முடிகின்றது.