வடக்கில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!
மன்னார் மாவட்டத்தில் 2 ஆவது கொரோனா தொற்று மரணம் நேற்று பதிவாகி உள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் நேற்று மேலும் 23 பேர் புதிதாக கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள சிலாபத்துறை பகுதியைச் சேர்ந்த 63 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் கடந்த வாரம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் விடுதி இலக்கம் 2 இல் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நேரம் குறித்த விடுதியில் சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை அடையாளம் காணப்பட்டமையினால் இவருக்கும் பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
எனினும் பி.சி.ஆர்.பரிசோதனையின் போது தொற்று இல்லை என தெரிய வந்தது.
இந்த நிலையில் குறித்த நபர் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இவருக்கு நேற்று முந்தினம் இரவு சடுதியாக மூச்சுத் தினறல் ஏற்பட்டது.
இந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரும் வழியில் உயிரிழந்தார். உயிரிழந்த பின் இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையின் போது இவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இத்துடன் மன்னார் மாவட்டத்தில் 2 கொரோனா மரணங்கள் பதிவாகி உள்ளன. இவர்கள் இருவரும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை விடுதி 2 இல் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்த போது அங்கு இருந்த நோயாளியுடன் தொடர்புபட்ட நிலையில் தொற்று ஏற்பட்டிருக்கக் கூடும் என நம்பப்படுகின்றது.
ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 140 கொரோனா தொற்றாளர்கள் மன்னார் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஜனவரி மாதம் மன்னார் மாவட்டத்தில் 2849 பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில், மாவட்டத்தில் மொத்தமாக 7649 பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஜனவரி மாதத்தில் ஒவ்வொரு நூறு பி.சி.ஆர்.பரிசோதனைகள் சமூகத்தில் மேற்கொள்ளப்படுகின்ற போது 3.9 வீத நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றார்கள்.
இது மன்னார் மாவட்டத்தில் தொற்றின் நிலை அதிகரித்து காணப்படுவதை எடுத்துக்காட்டுகின்றது.
எனவே மக்கள் அவதானத்தோடும், பொறுப்போடும் சுகாதார நடைமுறைகளை பின் பற்றி நடந்து கொள்ள வேண்டும் என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் மேலும் தெரிவித்தார்.