மன்னார் தந்தை செல்வா உருவச்சிலை முன்பாக ஊடக அறிக்கை வாசிப்பு- வெள்ளாங்குளம் நோக்கி தொடரும் பேரணி!
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான தமிழர் பேரணி இன்று காலை வவுனியாவில் இருந்து மன்னார் நோக்கி பயணித்து காலை 12 மணியளவில் மன்னார் மடு சந்தியை சென்றடைந்தது. பின்னர் மடு சந்தியில் இருந்து ஆரம்பித்த பேரணியானது முருங்கன் ஊடாக மன்னார் நோக்கி சென்றது.
இதன் போது பிரதான வீதிகளில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடிகளில் பொலிஸ் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்ட நிலையில் பல்வேறு தடைகளையும் தாண்டி குறித்த பேரணி மன்னார் பிரதான பாலம் ஊடாக மன்னார் நகர சென்றடைந்தது.
மன்னார் பிரதான பாலத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டதோடு, மன்னார் நீதிமன்றத்தின் கட்டளையினையும் பொலிஸார் ஒலி பெருக்கி மூலம் அறியப்படுத்தினர்.
பேரணியாக மோட்டார் சைக்களில் மற்றும் வாகனங்களில் சென்றவர்களின் வாகன இலங்கங்களையும் பொலிஸார் பதிவு செய்த பின்னர் மன்னார் நகர பகுதிக்குள் செல்ல அனுமதித்தனர்.
மன்னார் பிரதான பாலத்தில் இருந்து மன்னார் நகர பகுதியில் உள்ள தந்தை செல்வா சிலையடி வரை குறித்த ஊர்வலம் இடம் பெற்றது.
இதன் போது, மன்னார் பேருந்து நிலையத்திற்கு முன்னால் அமைந்துள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு முன்பாக ஊடக அறிக்கையும் வாசிக்கப்பட்டது.
மேலும் மன்னார் மாவட்டத்தில் உள்ள முஸ்ஸம் மக்களும் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இணைந்து கொண்டனர்.
குறித்த போரட்டம் மன்னார் நகரில் இருந்து மன்னார் யாழ் பிரதான வீதியூடாக வெள்ளாங்குளம் நோக்கி செல்கின்றது.






