மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மன்னார் சதோச மனித புதைகுழி அகழ்வு பணி
மன்னார் (Mannar) 'சதோச' மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் புதன்கிழமை மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இந்நிலையில் அன்றைய தினம் உரிய சான்றுப் பொருட்களை கொழும்பில் உள்ள நிறுவனங்களுக்கு எடுத்துச் சென்று அகழ்வாராய்ச்சி செய்வது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்துள்ளார்.
மன்னார் 'சதோச' மனித புதைகுழி தொடர்பில் வினவிய போதே காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பாக மன்றில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்தார்.
'சதோச' மனித புதைகுழி
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், '' மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் 'சதோச' மனித புதைகுழி தொடர்பான வழக்கு கடந்த திங்கட்கிழமை(7) தொடக்கம் நேற்று வெள்ளிக்கிழமை (11) வரை ஏற்கனவே சதோச மனித புதைகுழியில் அகழ்வு செய்யப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளோடு, காணப்படும் வேறு பொருட்கள் காணப்படும் பெட்டிகள்,பொதி செய்யப்பட்டு,நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தன.
பல வருடங்களுக்கு பிற்பாடு,குறித்த ஐந்து நாட்களும்,பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரும்,சட்ட வைத்திய அதிகாரி குழுவும் மன்னார் நீதவான் முன்னிலையில்,காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தினரும்பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக மன்றில் முன்னிலையாகும் சட்டத்தரணிகளும் நீதிமன்ற அலுவலகர்களும் இணைந்து தரம் பிரித்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இதன் போது மனித எலும்பு தொகுதிகள் தனியாகவும்,அதனுடன் எடுக்கப்பட்ட பிற பொருட்கள் தனியாகவும் பிரித்தெடுக்கப்பட்டு,பொதி செய்யப்பட்டு பாதுகாப்பாக நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டது.
வழக்கு விசாரணை
இது தொடர்பான மேலதிக விடயங்கள் சம்பந்தமாக மனித எலும்புகள் குறித்து சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை யும்,மீட்கப்பட்ட ஏனைய பொருட்கள் குறித்து களனி பேராசிரியர் ராஜ் சோமதேவ வின் தொல்பொருள் அறிக்கையையும் நீதிமன்றம் கோரியுள்ளது.
அவர்கள் குறித்த விடயங்கள் தொடர்பாக எதிர் வரும் புதன்கிழமை(16) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது,இவ்விடயம் தொடர்பாக தீர்மானிக்கப் படவுள்ளது.
அவர்கள் உரிய சான்றுப் பொருட்களை கொழும்பில் உள்ள தமது நிறுவனங்களுக்கு எடுத்துச் சென்று அகழ்வாராய்ச்சி செய்து அவை எந்த காலப்பகுதிக்கு உரியது என தொல்பொருள் திணைக்களமும்,அந்த எலும்புக் கூட்டுத் தொகுதிகளில் இறப்புக்கான காரணம், வயது, பாலினம் போன்ற விடயங்கள் தொடர்பான அறிக்கையையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதற்கான கால அளவுகள் எதிர்வரும் புதன்கிழமை நீதிமன்றத்தில் தெரியப்படுத்தப்படும். குறித்த 5 நாட்களும் இடம் பெற்ற அகழ்வு நடவடிக்கைகளின் போது எடுக்கப்பட்ட பொருட்கள் பிறித்து எடுக்கப்பட்டது'' என அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |