இலங்கையில் இரு உக்ரைன் பிரஜைகள் கைது
இலங்கை (Sri Lanka) தனியார் வங்கி ஒன்றின் ஆண்டு நிறைவுக்கு பரிசுகள் தருவதாக விளம்பரம் செய்து இரண்டு மில்லியன் ரூபாவிற்கும் மேல் மோசடி செய்த உக்ரைன் (Ukraine) பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நாட்டின் தனியார் வங்கி ஒன்றின் ஆண்டு நிறைவை முன்னிட்டு பரிசுகள் வழங்கப்படவுள்ளதாக கடந்த சில நாட்களாக முகப்புத்தகத்தில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டிருந்தன.
மோசடி நடவடிக்கைகள்
விளம்பரத்தைப் பார்க்கும் நபர்களின் வங்கிக் கணக்குத் தகவல் உட்பட பல தனிப்பட்ட தகவல்கள் அதில் இணைக்கப்பட வேண்டும்.
இவ்வாறு பிரவேசிக்கும் நபர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்ட பணத்தை ஒரு குழுவினர் மோசடி செய்வதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறை உத்தியோகத்தர்கள், உனவட்டுன பிரதேசத்தில் இருந்து இந்த மோசடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதினை கண்டுபிடித்துள்ளனர்.
விரைந்த விசாரணை
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த விசாரணை அதிகாரிகள் இரண்டு பேரை கைது செய்த நிலையில் கைதான இருவரும் உக்ரைன் பிரஜைகள் என்பது தெரியவந்துள்ளது.
கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்துள்ள இவர்கள், டெலிகிராம் குழு ஒன்றின் ஊடாக இந்த மோசடி செயலை மேற்கொண்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், சந்தேகநபர்கள் கொழும்பு (Colombo) நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |