2026 முதலாம் தர மாணவர் சேர்க்கை இன்று ஆரம்பம்
புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் முதலாம் தரத்திற்குரிய பாடத்திட்டத்தை இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களைப் பாடசாலைகளில் அனுமதிக்கும் நிகழ்வு இன்று (29) நடைபெறவுள்ளது.
இந்த ஆண்டிற்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளும் தேசிய விழா, அத்துருகிரிய குணசேகர வித்தியாலயத்தில் இன்று காலை கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நடைபெறவுள்ளது.
அநீதி ஏற்பட இடமளிக்கப்போவதில்லை
இதேவேளை, வளமான நாட்டிற்குள் வளமான கல்வியை பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

முதலாம் தரத்தில் இணையும் பிள்ளைகளுக்கு வாழ்த்துச் செய்தியொன்றை விடுத்து பிரதமர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு பிள்ளையினதும் கல்வி பெற்றோரின் பொருளாதாரத்தில் தீர்மானிக்கப்படக்கூடாது என்று சுட்டிக்காட்டிய பிரதமர், கல்வியிலிருந்து எந்தவொரு பிள்ளையும் புறக்கணிக்கப்படக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், ஆறாம் தர புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவது அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டாலும், அதன் மூலம் எந்தவொரு மாணவருக்கும் அநீதி ஏற்பட இடமளிக்கப்போவதில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |