காணாமல் ஆக்கப்பட்டோர் எங்கே? அரசாங்கம் முன்னெடுத்த வேலைத்திட்டம் என்ன? நாடாளுமன்றில் ஒலித்த குரல்
இறுதி யுத்தத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காணமால் ஆக்கப்பட்டனரென அரசாங்கம் அமைத்த ஆணைக்குழுக்களே தெரிவித்துள்ள நிலையில், இதுவரை அவர்களை கண்டறிய அரசாங்கம் முன்னெடுத்த வேலைத்திட்டம் என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன்.
நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
இதன்போது இறுதி யுத்தத்தின் பின் காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து கடுமையாக சாடினார்.
ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காணமால் போயுள்ளனர் என்பதை நீங்கள் அமைத்த ஆணைக்குழுவே கூறியது. 20 ஆயிரம் பேர் காணமால் போனார்கள் என பரணகம ஆணைக்குழு கூறியது, உடலாகம ஆணைக்குழு, எல்.எல்.ஆர்.சி ஆணைக்குழு என்பனவும் இதனைக் கூறியுள்ளன.
மஹிந்த ராஜபக்ஷ நியமித்த ஆணைக்குழுவே இதனைக் கூறியுள்ள நிலையில் இது குறித்து நீங்கள் கூறவருவது என்ன?
பாதுகாப்பு படைகளிடம் சரணடைந்த மூவாயிரம் பேர் காணமால் போயுள்ளனர் என உங்களின் ஆணைக்குழுவே கூறியுள்ளது.
உங்களின் ஆணைக்குழுவே இதனை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அவர்களின் ஒருவரைக்கூட கண்டறிய முடியாது போயுள்ளது என்றால் நீங்கள் பேசுவதில் அர்த்தம் உள்ளதா? என கடுமையாக சாடினார்.