டிட்வா நிவாரணத்தில் கைவரிசை...! இருவருக்கு விளக்கமறியல்
மொனராகலை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராம உத்தியோகத்தர் ஒருவரும் பெல்வத்தை சீனி ஆலையின் ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொதுமகன் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபா பணத்தைக் கையூட்டலாகப் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கையூட்டல் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
முதற்கட்ட தவணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சமீபத்தில் ஏற்பட்ட டிட்வா சூறாவளி காரணமாகப் பாரியளவில் சேதமடைந்த வீடு ஒன்றுக்காக அரசாங்கத்தினால் 50 இலட்சம் ரூபா நிவாரண நிதி அங்கீகரிக்கப்பட்டிருந்தது.

இந்த நிதியை விடுவிப்பதற்காகவே பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இவர்கள் இருவரும் கையூட்டல் கோரியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுச் சேதத்திற்காக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட 50 இலட்சம் ரூபாவில் முதற்கட்ட தவணையாக 2026 ஏப்ரல் 10 ஆம் திகதி 20 இலட்சம் ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட நிதி
அவ்வாறு வழங்கப்பட்ட முதற்கட்ட நிதியிலிருந்தே சந்தேக நபர்கள் இருவரும் 10 இலட்சம் ரூபாவைக் கையூட்டலாகப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இதுமட்டுமன்றி வருங்காலத்தில் அரசாங்கத்தால் விடுவிக்கப்படவிருந்த இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட தவணை நிதிகளை எவ்வித தடையுமின்றி விடுவிப்பதற்கும் தலா 5 இலட்சம் ரூபா வீதம் (மேலும் 10 இலட்சம் ரூபா) கையூட்டலாக வழங்க வேண்டும் என அவர்கள் நிபந்தனை விதித்திருந்தமை முதற்கட்ட விசாரணைகளில் இருந்து அம்பலமாகியுள்ளது.

சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் மே மாதம் 25 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்த மேலதிக விசாரணைகளைக் கையூட்டல் ஊழல் ஒழிப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |