மஹிந்தவின் உத்தரவை அடுத்து எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கை
சதொச விற்பனை நிலையங்கள் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஊடாக ஏப்ரல் 01 முதல் சிவப்பு மற்றும் வெள்ளை பச்சரிசி ஒரு கிலோ 95 ரூபாவுக்கும், நாட்டரிசி ஒரு கிலோ 97 ரூபாவுக்கும் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கு போதுமானளவு அரிசி களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார் சதொச தலைவர், மொத்த கூட்டுறவு விற்பனை நிறுவன ஆணையாளர், பிரதான விற்பனை நிலையங்களின் பிரதானிகள் ஆகியோருடன் விவசாயத்துறை அமைச்சில் நடை பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னரே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, அரசியின் நிர்ணய விலையை பேணுவது சலால்மிக்கதாக உள்ளது.
அரிசியின் விற்பனை விலை தொடர்பில் அரசாங்கம் வர்த்தமானி வெளியிட்டாலும் அவற்றை முறையாக பின்பற்ற முடியாத தன்மை காணப்படுகிறது.
கடந்த காலங்களில் அரிசி உற்பத்தியாளர்கள் முறையற்ற வகையில் செயற்பட்டதன் காரணமாக அரிசி விலையில் மாறுப்பட்ட தன்மை ஏற்பட்டது. பண்டிகைக் காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைக் குறைப்பினூடாக மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதன் முதற்கட்டமாக அரிசி விலையின் நிர்ணய தன்மையை உறுதியாக பேண தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விலைக் குறைப்பு கார்கில் புட் சிட்டி உட்பட பிரதான விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாடு தழுவிய ரீதியில் உள்ள மொத்த விற்பனை கூட்டுறவு நிலையங்கள்,447 சதொச விற்பனை நிலையங்கள் மற்றும் பிரதான விற்பனை நிலையங்கள் ஆகியவற்றுக்கு 3 மாத காலத்துக்கு தேவையான அரிசி நெல் சந்தைப்படுத்தல் சபை ஊடாக விநியோகிக்கப்படும். நாட்டில் அரிசி விநியோகத்தில் எவ்வித தட்டுப்பாடும் கிடையாது.
6 மாத காலத்துக்கு தேவையான அரிசி போதுமான அளவிற்கு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.