போதைப்பொருள் கடத்தலில் பிக்குகள்: காவி உடையில் மோசமான செயல்: மகாநாயக்க தேரர்கள் சீற்றம்
புனிதமான காவி உடையைத் தவறாகப் பயன்படுத்தி, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பிக்குகள் குழுவினரின் சாசன விரோத மற்றும் சட்டவிரோதச் செயலை வன்மையாகக் கண்டிப்பதாக மூன்று நிக்காயக்களின் மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர்.
மூன்று நிக்காயக்களின் மகாநாயக்க தேரர்கள் கூட்டாக இணைந்து வௌியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைச் சமூகத்தில் பிக்குகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாரம்பரிய கௌரவத்தையும் நன்மதிப்பையும் புனிதமான காவி உடை மீது பௌத்தர்கள் கொண்டுள்ள ஆழ்ந்த நம்பிக்கையையும் துஷ்பிரயோகம் செய்து இவ்வாறான சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட அனைத்துப் போலி பிக்குகளுக்கும் உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றத்தில் முன்னிலை
இதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு அரச இயந்திரம் உடனடியாக தலையிட வேண்டும் என்றும் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சுமார் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய “குஷ்” மற்றும் “ஹேஷ்” ரக போதைப்பொருட்களுடன் 22 தேரர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

கட்டுநாயக்க விமான நிலைய வரலாற்றில் ஒரே நேரத்தில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகை இதுவென்பதுடன், பௌத்த தேரர்கள் குழுவொன்று இவ்வாறு கைது செய்யப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
கைது செய்யப்பட்டவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் உயர் கல்வி கற்கும் இளம் தேரர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களை மேலதிக விசாரணைகளுக்காக இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 7 மணி நேரம் முன்