ஒற்றையாட்சி அரசியல் சாசனத்தை தமிழினம் ஏற்காது - தமிழ்தேசியக் கட்சிகள் கூட்டாக அறிவிப்பு
ஒற்றையாட்சியை அடிப்படையாகக் கொண்ட அரசியல் சாசனம் தமிழ் தேசிய இனத்தினால் கனவில் கூட கருத்தில் கொள்ளப்படமாட்டாது என தமிழ் தேசியக் கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.
ஒற்றையாட்சி அரசியல் அமைப்புக்குள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிலைநாட்ட முடியாது என்பதில் தாம் உறுதியாக உள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ள நிலையில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அதற்கு எதிராக பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் 13 ஆவது திருத்ததிற்கு எதிராக 30 ஆம் திகதி நல்லுாரில் போராட்டம் ஒன்றைய மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் வடக்கைப் பிரதிநிதிதுவப்படுத்தும் தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் இன்றைய தினம் ஒன்றிணைந்து யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தனர்.
குறித்த ஊடக சந்திப்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என்.சிறிகாந்தா, ரொலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட்டின் தலைவர் த.சித்தார்த்தன் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ்பின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போதே ஒற்றையாட்சி முறையை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என்.சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.
