யாழில் ஒரு கோடிக்கும் அதிகமான பணம்- 25 பவுண் நகைகள் கொள்ளை
யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் இரு வீடுகளில் ஒரு கோடியே 15 இலட்ச ரூபாய் பணம் மற்றும் 25 பவுண் நகைகள் என்பவை களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த திருடர்கள் , வீட்டில் இருந்த ஒரு கோடியே 15 இலட்ச ரூபாய் பணத்தினை திருடி சென்றுள்ளனர்.
வீட்டின் சமையலறை ஊடாக புகுந்த திருடர்களே வீட்டில் இருந்த பணத்தை களவாடி சென்றுள்ளனர்.
காவல் நிலையத்தில் முறைப்பாடு
இந்நிலையி்ல் சம்பவம் தொடர்பில் உரிமையாளர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து , காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த வீட்டு உரிமையாளர் சீட்டு பிடிக்கும் தொழில் செய்பவர் என்றும் , நேற்றைய தினம் சனிக்கிழமை சீட்டு கூற இருந்த நிலையில் , சீட்டு பணமான ஒரு கோடியே 15 இலட்ச ரூபாய் பணத்தை வீட்டில் பாதுகாப்பாக வைத்திருந்த வேளையே குறித்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதேவேளை, உடுப்பிட்டி பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த 25 பவுண் தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர் வீட்டு உரிமையாளர் காலையில் எழுந்த போது, வீட்டின் முன் பக்க கதவுகள் திறந்து இருப்பதனை அவதானித்து , நகைகள் வைத்த இடத்திற்கு சென்று பார்த்த போது, நகைகள் களவாடப்பட்டு இருந்துள்ளது.
நகைகள் களவாடப்பட்டமை தொடர்பில் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |