தாயுமான தலைவன்…!
யாழ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவனொருவன் தனது பிறந்த நாளை செஞ்சோலை சிறார் இல்ல மாணவர்களுடன் கொண்டாட விரும்பினார், இதனால் அண்மையில் செஞ்சோலை சிறார் இல்லத்திற்குச் சென்று அவர்களுடன் ஒரு மாலைப் பொழுதைக் கழித்திருந்தேன்.
போரின் தாக்கங்கள் முடிந்துவிட்டது என்று அரசும் அரசுக்கு ஆதரவானவர்களும் சொல்லுகிறார்கள். ஆனால் போரால் தாயை இழந்த, போரால் தந்தையை இழந்த அல்லது இருவரையும் போரில் இழந்த பிள்ளைகளைக் கண்டோம்.
தலைவர் பிரபாகரன் உருவாக்கிய அந்த செஞ்சோலையின் நிழலில் இன்னமும் குழந்தைகள் இருந்து ஆறுகிறார்கள் என்று எண்ணிக் கொண்டேன். இன்று செஞ்சோலை இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் தலைவரால் உருவாக்கப்பட்ட செஞ்சோலையின் அடையாளம் குழந்தைகளுக்கு எப்போதும் தாய்மையை அளிக்கிறது.
தாயுமான தலைவன்
உலகின் தலைசிறந்த போராளிகள் அதிகம் சூரியனுக்கும் புயலுக்கும் நெருப்பிற்கும் தான் ஒப்பிடப்படுகின்றனர். ஈழத்தின் சூரியனாய், ஈழத்தின் புயலாய், ஈழத்தின் நெருப்பாய் ஒப்பிடப்படுகின்ற தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன், மனிதப் பிறப்பில் உன்னதமாக மதிக்கப்படும் தாய்மைக்கும் ஒப்பிடப்படுகின்றமைதான் தனிச்சிறப்பானது.
தாயைப் போன்ற தலைவன் என்ற ஈரமான முகத்தை, அரவணைப்பை, அன்பை எங்கள் ஈழ மண் முழுதாய் அனுபவித்திருக்கிறது. அதுவே தலைவர் பிரபாகரன் உலகின் தலைசிறந்த போராளி, இதுவரை உலகம் கண்டிராத ஒப்பற்ற போராளி என்பதை சொல்கிற வரலாற்று உண்மை.
தமிழீழ விடுதலைப் போராட்டம் உலகின் வீரம் செறிந்த ஒரு போராட்டம். தலைவர் பிரபாகரன், தமிழீழத்தின் அத்தனை படைக்கட்டுமானங்களையும் உருவாக்கி, உலகத்தின் கவனத்தையே ஈர்த்த தலைவர். தமிழர்களின் வரலாற்றில் சோழ மன்னன், தனது வீரத்தால் அழியாத சரித்திரத்தை எழுதிச் சென்றான். அதன் பின்னர் தலைவர் பிரபாகரன் ஈழ விடுதலைப் போராட்டத்தின் வழியாக முன்னெடுத்த போர் மரபுகளும் நிலக் கட்டுமானங்களும் புதியதொரு வீர வரலாற்றையும் நிர்வாகத் திறனையும் எழுதியுள்ளமை இந்த நூற்றாண்டின் மிகப் பெரும் சாதனையாகும்.
அன்னையான அண்ணை
சிறந்ததொரு தலைவன், வீரமான தலைவனின் ஈரமான பக்கங்கள்தான், அவரை தாயைப் போன்ற தலைவன் என்று உலகத் தமிழினத்தால் மெச்ச வைக்கின்றது. தமிழர்களின் தலைசிறந்த தலைவனாக, எமது உரிமையையும் நிலத்தையும் வென்றெடுப்பதில் கொண்டிருந்த வீரத்திற்கு நிகராக ஈழ நிலத்தின் ஒவ்வொரு உயிர்களையும் ஒரு தாயைப் போல தலைவர் நேசித்தார்.
ஒரு தாயைப் போல தலைவர் காத்து நின்றார். அன்னையர் தின நாட்களில் அன்னை போலான எம் தலைவரின் பக்கங்களை பேசுவது, இன்றும் எமது மண்ணை எப்படி நாம் கட்டமைத்துக்கொள்ள வேண்டும் என்பதைத் தான் வலியுறுத்துகிறது, அல்லது வழிகாட்டுகிறது.
இன்று ஈழத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகிவிட்டது. சிறுவர் இல்லங்கள் என்ற பெயரில் பணம் பறிப்புக்கள் நிறையவே நடக்கின்றன. பேருந்துகளில் குழந்தைகள் பிச்சை எடுக்கின்றனர். ஊது பத்தி விற்கும், கடலை மா பொதிகளை விற்கும் குழந்தைகளை தினமும் வீதிகளில் காண்கிறோம். அவர்களுக்கு சரியான கல்வி இல்லை. அவர்கள் சிறுவர் தொழிலாளிகள் ஆக்கப்பட்டுள்ளனர். போதைப் பொருள் சுமக்கும் தொழிலாளியாக, அதற்கு அடிமையாகும் குழந்தைகளாக இன்றைய ஈழத்தின் தலைமுறை மாற்றப்பட்டுள்ளது. மிகக் கடுமையான போர் காலத்தில் - தமிழீழ காலத்தில் இந்த நிலையில்லை.
பெருந்தாயுள்ளமாக செஞ்சோலை
தலைவர் அவர்களினால் உருவாக்கப்பட்ட செஞ்சோலை அமைப்பு, ஆதரவற்ற குழந்தைகளின் இல்லமானது. குழந்தைகளின் மகிழ்ச்சியான பாதுகாப்பான வீடாக அமைந்த செஞ்சோலை, போரினாலும், சமூகப் பிரச்சினைகளாலும் அனாதரவாக்கப்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளித்தது.
தமிழீழ காலத்தில் தெருக்களில் ஆதரவற்ற குழந்தைகளைக் காண முடியாது. பிச்சை எடுக்கும் குழந்தைகளைக் காண முடியாது. தமிழீழ நிலத்தில் எந்தவொரு குழந்தைகளும் அல்லல்படக்கூடாது என்ற பெருந்தாயுள்ளதுடன் செஞ்சோலை உருவாக்கப்பட்டது.
தலைவர் பிரபாகரனின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கிய செஞ்சோலை குழந்தைகள் பேரன்பு கொண்ட தாய்மையால் வளர்த்து ஆளாக்கப்பட்டனர். இவ்வாறு ஆளாக்கப்பட்ட பலரும் இன்று மிகப் பெரிய இடத்தில் உள்ளனர். தலைவரால் வளர்க்கப்பட்ட அந்தக் குழந்தைகள், எமது தலைவனின் தாயுள்ளத்திற்கு சாட்சிகளாக இன்றும் வாழ்கின்றனர்.
அவர்களுக்கு கல்வி, திருமண வாழ்க்கை என யாவும் சிறப்பாக அமைத்துக் கொடுக்கப்பட்டது. பலர் பல்கலைக்கழகம் சென்று இன்று நல்ல தொழில் நிலைகளில் சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். செஞ்சோலை மாத்திரமின்றி, காந்தரூபன் அறிவுச்சோலை, குருகுலம், பாரதி இல்லம் என இல்லங்களை அமைத்து குழந்தைகள் காக்கப்பட்டனர்.
தாய் தந்தையர்களுக்கும் தாயாக
போராளித் தலைவன், போரில் மாத்திரமே கவனம் செலுத்துவார் என்ற பொது அபிப்பிராயத்தை மாற்றிய பெருமை தலைவருக்கு உண்டு. ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாத்திரமல்ல, ஆதரவற்ற தாய், தந்தையருக்குமான தமிழீழ முதியோர் இல்லங்களை தலைவர் அமைத்தார். மதிவதனி பிரபாகரன் அவர்கள், ஈழத்தின் மிகச் சிறந்த முதியோர் இல்லத்தை கிளிநொச்சியில் திறந்து வைத்த அந்த நாட்களை எவரும் மறந்துவிட முடியாது.
தன் குழந்தைகளைக் காட்டிலும், தன் பெற்றோரைக் காட்டிலும் இந்த மண்ணின் குழந்தைகளையும் முதியவர்களையும் நேசித்தவர் தலைவர் என்பதை சிங்கள தலைவர்களே ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இனப்படுகொலையாளி சரத்பொன்சேகாவும், இனவாதி ஞானசார தேரரும்கூட பிரபாகரன் அவர்கள் சிறந்த தலைவர் என்றும் அவர் தன்னுடைய மக்களுக்கு சிறந்த தலைவராக வாழ்ந்தார் என்றும் அப்படி சிங்களத் தலைவர்கள் எவருமில்லை என்று கூறியதும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.
எதிரிகளாலும் நிராகரிக்க முடியாத தலைவன், எமது தலைவர். அதனால்தான் இன்றும் செஞ்சோலை என்ற பெயரை சிங்கள அரசால் மாற்ற முடியாதுள்ளது. இன்றும் செஞ்சோலை இலங்கை அரசினால் இயக்கப்பட்டாலும், அந்தப் பெயர் பலகையுடன் பள்ளி செல்லும் பேருந்தை காண்கையில் தலைவரின் நினைவு எவருக்கும் வரும்.
போராளிகளை பிள்ளையென அழைத்த தலைவர்
அண்மையில் ஒரு முன்னாள் போராளி அண்ணா, ஒருவர் பேசிக் கொண்டிருந்தபோது, தலைவர் தன்னை பிள்ளை என்றுதான் அழைப்பார் என்றார். “என்ட பிள்ளை“ என்றழைக்கும் எங்கள் தாயுமானவர், தந்தையுமானவர் என்று அந்த நாட்களை நினைவுகூர்ந்தார். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைப் போரில் பங்குபற்றிய சிங்கள இராணுவத்தினன் ஒருவன், வெற்றிக் பிறகு, மீன் சந்தையில் மீன் வெட்டி பிழைப்பு நடத்துவதாக ஒரு செய்தி இணையங்களை அலங்கரித்தது.
தலைவர் பிரபாகரன், போராளிகளுக்கும் அவர்களின் வாழ்வுக்கும் கொடுத்த முக்கியத்துவத்தை, சிங்கள அரசு, தனது படைகளுக்கு துளியளவும் செய்யவில்லை என்பதை ஒவ்வொரு சிங்களவர்களும் இனி ஏற்றுக்கொள்வார்கள்.
தலைவர் பிரபாகரன், நவம் அறிவுக்கூடத்தை திறந்து வைத்து, அங்கு போராட்டத்தில் அவயகங்கள் பாதிக்கப்பட்ட, போராளிகளுக்கு சிறந்ததொரு வாழ்வை அமைத்துக் கொடுத்தார். அவயகங்கள் பாதிக்கப்பட்டாலும் மனதால் எழுந்து நிற்கும் போராளி சமூகத்தை உருவாக்கி காட்டினார். தற்போதும் முன்னாள் போராளிகள் நவம் அறிவுக்கூடத்தை மீட்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அது தற்போது சிங்கள இராணுவ படமுகாமாக உள்ளது. நவம் அறிவுக்கூட கட்டடங்கள், வளாகம் யாவும் அவயகங்கள் பாதிக்கப்பட்ட போராளிகளுககான வாழ்க்கை முறைக்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளது.
அன்னையர்கள் அன்று பசியில் வாடியதில்லை
இன்றைக்கு இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்குள் உணவில்லாமல் ஆதரவில்லாமல் அன்னையர்கள் துடிக்கின்றனர். ஆனால் தலைவர் பிரபாகரன் காலத்தில் பிரபாகரன் மண்ணில் ஒரு அன்னையர்கூட பசியில் இருந்ததில்லை. ஆதரவற்று நின்றதில்லை. அவர்களுக்கான அத்தனை வசதிகளும் கொண்ட இல்லங்கள் அமைக்கப்பட்டன. வரலாற்றில் நிலைத்த அன்னையர் இல்லத்தை மதிவதனி பிரபாகரன் அவர்கள் ஈழத்தில் திறந்து வைத்தமை வரலாற்று நிகழ்வும் சாட்சியுமாகும்.
பாதைகள், மண்டபங்கள், மலசலகூடங்கள் என்று எல்லாம், போராளிகள் எவரும் எவரிலும் தங்கி வாழாது தாமாக வாழக் கூடிய முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் போராளி சகோதரி ஒருவர் கூறினார். அதிகம் பேசாதவர் தலைவர். ஆனால் அவர் ஈழ விடுதலைப் போராட்டத்தில் உருவாக்கிய ஒவ்வொரு கட்டமைப்பும் செயலும் குறித்து நாம் அதிகம் பேசிக் கொண்டிருக்கலாம்.உண்மையில், வரலாறு அதிகமதிகம் பேசப் போகின்றது என்பதே இதன் அர்த்தமாகும்.
குழந்தைகள், போராளிகள், மாவீரர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என்று ஒட்டுமொத்த சமூகத்திற்குமான வாழ்க்கையை வரைந்து அதனை நடைமுறைப்படுத்தி வரலாற்றின் புதிய பக்கங்களில் இடம் பிடித்த அந்த தலைவனின்றி எமது நிலம் இன்று பெரும் அல்லல்ப்படுகின்றது.
காடுகளின் தாய்
மனிதர்களுக்கு மாத்திரமா பெருந்தாய்மையாக தலைவர் இருந்தார்? எமது நிலத்தின் வனத்திற்கும், மரங்களுக்கும்தான் தாய். எங்கள் மண்ணிற்கும்தான் தாய். மண்ணையும் வனத்தையும் மரங்களையும் பயிர்களையும் காக்கவும் மேம்படுத்தவுமான கட்டமைப்புக்கள் இதனை நடைமுறையாய் சரித்திரமாய் எடுத்துரைக்கின்றன.
வடக்கு கிழக்கில் பிரபாகரன் காலத்திலேயே காடுகள் அப்பிடியே பாதுகாக்கப்பட்டன என்று சிறிலங்கா முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன ஒப்புக்கொள்கிறார். அப்படிப் பார்த்தால் காடுகளின் தாயாகவும் தலைவர் பிரபாகரன் அவர்கள் இருந்திருக்கிறார் என்பதும் ஈழ மண்ணுக்குப் பெருமையாகும்.
உண்மையில் எதிர்த்தரப்பால்கூட இவற்றை எல்லாம் மறுக்க முடியாது. ஒரு உன்னதமான இலட்சியத்திற்காக, நியாய வழியில் போராடிய ஒரு தலைவனால்த்தான், மக்களையும் மண்ணையும் வனங்களையும் மரங்களையும் நேசிக்க முடியும்.
எமது தாய்மை நிறைந்த தலைவனை சிங்கள தேசமும், உலகமும், கள்ள மௌனம் விட்டு, முழு மனதோடு ஏற்றுக்கொள்கிற ஒரு காலம் மலர்ந்தே தீரும். அந்த நாட்கள்தான் எமது நிலமும் இனமும் விடுதலையைப் பெற்று வாழும். அதுவே ஈழ நிலம் முழுவதும் இன்று துயரில் அலையும் அன்னையர்களுக்கும் விடுதலையையும் நிம்மதியையும் அளிக்கும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 12 May, 2024 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.