சிறையில் அடைக்கப்பட்ட இஷாரா செவ்வந்தியின் தாயார் உயிரிழப்பு
காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தியின் தாயார் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
கணேமுல்ல சஞ்சீவ கொலையை அடுத்து இஷாரா செவ்வந்தி தப்பியோடிய நிலையில் காவல்துறையினர் அவரது தாயாரையும் சகோதரனையும் கைது செய்து சிறையில் அடைத்ததாக சட்டத்தரணி தெரிவித்தார்.
சிறையில் இருந்தவேளை உயிரிழப்பு
இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இஷாராவின் தாயார் சிறையில் இருந்தபோது ஏற்பட்ட ஒரு நோயால் இறந்துவிட்டதாக வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதேவேளை இஷாரா செவ்வந்தியின் இளைய சகோதரரை பிணையில் விடுவிக்க கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி லால் ரணசிங்க பண்டார (17) உத்தரவிட்டார்.
சகோதரருக்கு பிணை
கிட்டத்தட்ட எட்டு மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் சமிந்து திவங்க வீரசிங்கவை தலா 200,000 ரூபாய் மற்றும் 100,000 ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க கொழும்பு தலைமை நீதவானுக்கு உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
சந்தேகநபர் சார்பாக முன்னிலையான வழக்கறிஞர் சிதாந்த ஜெயவர்தன சமர்ப்பித்த வாதங்களை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதி லால் ரணசிங்க பண்டார, இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தனது கட்சிக்காரர் எந்த வகையிலும் குற்றத்தில் ஈடுபட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை என்றும், அவர் கைது செய்யப்பட்டதற்கான ஒரே காரணம் அவர் இஷாரா செவ்வந்தியின் சகோதரர் என்பதுதான் என்றும் கூறினார்.
சந்தேக நபரான இஷார செவ்வந்தியை கைது செய்ய முடியாததால், கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் அந்த இளைஞனையும் அவரது தாயாரையும் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தி சிறையில் அடைத்ததாகவும் சட்டத்தரணி தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
