பிடியாணை பிறப்பிக்கப்பட்ட எம்.பி :பகிரங்கமாக சிறப்பு விருந்தினராக பங்கேற்பு
கல்பிட்டி சுற்றுலா நீதவான் நீதிமன்றால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம்(ali sabri raheem) நேற்று (16) கல்பிட்டி அல் அக்சா தேசிய பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
கல்பிட்டி நகரில் இருந்து காவல்துறை உத்தியோகத்தர் மற்றும் பாடசாலை சமுகம் நாடாளுமன்ற உறுப்பினரை விழா மைதானத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
திறந்த பிடியாணை
கல்பிட்டியில் உள்ள அரச சார்பற்ற நிறுவனமொன்றினால் புத்தளம் நீதவான் நீதிமன்றத்திற்கு ஒதுக்கப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது நாடாளுமன்ற உறுப்பினர் மூன்று தடவைகள் நீதிமன்றத்தை தவிர்த்துள்ளார்.
எம்.பி சார்பில் சட்டத்தரணி அல்லது எம்.பி. நீதிமன்றில் முன்னிலையாகாமல் நீதிமன்றத்தை தவிர்த்ததன் அடிப்படையில் உடனடியாக நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மேலதிக மாவட்ட நீதிபதியும் நீதவானுமான அயோனா விமலரத்ன கல்பிட்டி காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
விரைவில் முன்னிலையாவார்
பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பகிரங்கமாக நிகழ்வில் கலந்துகொண்டமை தொடர்பில் கல்பிட்டி காவல் நிலைய பொறுப்பதிகாரி வசந்த சிறி லால் எதிரிசிங்க தெரிவிக்கையில்,
நாடாளுமன்ற உறுப்பினர் இதுவரை நீதிமன்றில் முன்னிலையாகவில்லை எனவும் அவர் விரைவில் முன்னிலையாவார் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் வடமேற்கு மாகாண ஆளுநர் அஹமட் நசீரும் கலந்துகொண்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |