எம்.பி சத்தியலிங்கம் விடுத்த கோரிக்கை: சுகாதார அமைச்சு நடவடிக்கை
வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கத்தின்(P. Sathiyalingam) கோரிக்கைகளுக்கு அமைவாக அரச மருந்தகங்கள் இல்லாத நகரங்களில் மருந்தகங்களை ஸ்தாபிக்க சுகாதார அமைச்சு(Ministry of Health) நடவடிக்கை எடுத்துள்ளது.
குறிப்பாக “உங்கள் நகரிலும் ஒரு மருந்தகம்” என்ற விசேட வேலைத்திட்டத்துக்கமைய, அரச ஒசுசல மருந்தகங்கள் இல்லாத நகரங்களில் துரிதமாக புதிய அரச மருந்தகங்களை ஸ்தாபிப்பதற்கே சுகாதார அமைச்சால் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) அறிவித்துள்ளார்.
கடந்த 05.02.2025 அன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம், “அரச வைத்தியசாலைகளில் காணப்படும் மருந்து தட்டுப்பாடு காரணமாக நோயாளர்கள் தமது பணத்தில் மருந்துகளை கொள்வனவு செய்யவேண்டியுள்ளது.
அரச மருந்தகங்கள்
இந்நிலையில், சலுகை விலையில் மருந்துக்கொள்வனவை மேற்கொள்ள உடனடியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒசுசலவினுடைய பிரிவினை சுகாதார அமைச்சு உடன் ஆரம்பிக்க வேண்டும்.” என அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதன்படி, அந்த கோரிக்கைக்கு அமைவாக சுகாதார அமைச்சினால் துரித திட்டத்தின் கீழ் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பிற மாகாணங்களிலும், மருந்தகங்கள் இல்லாத மாவட்டங்களிலும் அரச மருந்தகங்களை நிறுவுவதற்கான அவசரத் திட்டம் உரிய அதிகாரிகளால் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் தொடர் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதேவேளை, மக்கள் நலனை கருத்திலெடுத்து உடனடியாக இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை மேற்கொண்டுள்ள சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் அரசாங்கத்திற்கு தனது நன்றிகளை நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
