கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்- வெளியான பின்னணி! (காணொளி)
முல்லைத்தீவில் கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இன்றைய தினமே குடும்ப பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பூதன்வயல் கிராமத்தில் தனியார் ஒருவரின் தென்னங்காணி ஒன்றில் உள்ள கிணற்றில் இருந்தே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர் பூதன்வயல் கிராமத்தில் வசித்துவந்த 36 வயதுடைய யோகராசா றாஜினி என்ற குடும்ப பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவரை கடந்த 04.01.2022 ஆம் திகதியில் இருந்து காணவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள். திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் கணவரை பிரிந்து இன்னொரு ஆணுடன் குடும்பமாக வாழ்ந்து வந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவருக்கு 22 வயது ஆணும் 16 வயது பெண் பிள்ளையும் உள்ள நிலையில் முதற்கணவர் தட்டையர்மலை முத்துஐயன்கட்டில் வசித்துவந்துள்ளார். தாயின் பராமரிப்பில் பிள்ளைகள் இல்லாத நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கிளிநொச்சியினை சேர்ந்த ஆண் ஒருவருடன் வாழ்ந்து வந்துள்ளார்.
சொந்த வீடு இல்லாத நிலையில் பற்றையால் சூழப்பட்ட காணி ஒன்றில் ஒரு சிறிய குடிலிலேயே இவர்கள் குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளார்கள். உயிரிழந்தவரின் கைப்பை ஒன்று குறித்த தென்னங்காணிக்குள் காணப்பட்டுள்ளதை தொடர்ந்து சடலம் கிணற்றினுள் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் முள்ளியவளை காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை சட்டவைத்தியர் பி.நிலுசன், தடயவியல் காவல்துறையினர் ஆகியோர் முன்னிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைக்காக சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய 33 வயதுடைய கிளிநொச்சியினை சேர்ந்த ஆண் ஒருவரை முள்ளியவளை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னடுத்துள்ளனர்.