வயல் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்- சந்தேக நபர் தொடர்பில் நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு!
பூதன் வயலில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட குடும்ப பெண் கொலை செய்யப்பட்டு கிணற்றில் போடப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து அவரது இரண்டாவது கணவன் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முள்ளியவளை பூதன் வயல் கிராமத்தில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட குடும்ப பெண் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 20.01.2022 வரை விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடந்த 08.01.2022 அன்று முள்ளியவளை பூதன்வயல் பகுதியில் தென்னந்தோட்ட கிணறு ஒன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் 36 வயதுடைய குடும் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இந்த சம்பவத்தின் போது குறித்த பெண்ணுடன் வாழ்ந்து வந்த இரண்டாவது கணவனை விசாரணைக்கு அழைத்து சென்ற முள்ளியவளை காவல்துறையினர் 09.01.2022 அன்று கைது செய்துள்ளனர்.
காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட 33 வயதுடைய கிளிநொச்சி ஜெயபுரத்தினை சேர்ந்த சந்தேக நபரை இன்று முள்ளியவளை காவல்துறையினர் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளார்கள்.
முல்லைத்தீவு நீதிமன்றின் நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது கொலைக் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபரை எதிர்வரும் 20.01.2022 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.



