வட்டுவாகலில் காணி சுவீகரிப்புக்குத் தயாராகும் கடற்படை- கனரக வாகனங்களுடன் விசேட பாதுகாப்பு!
முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கடற்படையிரின் முகாமிற்கான காணி சுவீகரிப்புக்காக நாளை நில அளவைத் திணைக்களத்தினால் காணி அளவீடு மேற்கொள்ளப்படவுள்ளதாக காணி உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு சொந்தமான காணியில் கடற்படையினர் தளம் அமைத்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். 617 ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளன. காணி சுவீகரிப்பினை தடுத்து நிறுத்த அனைவரும் ஒன்று திரளவேண்டும் என நேற்று யாழில் எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை நேற்று செவ்வாய்க்கிழமை முதல் வட்டுவாகல் பகுதியில் கடற்படையினர் விசேடமாக வீதிச்சோதனை நிலையம் அமைத்துள்ளதோடு கடற்படையினர், முகாமுக்கு முன்னால் விசேட பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதோடு சுற்றுக்காவல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு மக்களை அச்சுறுத்தும் முகமாக கடற்படையினர் கனரக வாகனங்களில் முல்லைத்தீவு நகரிலும் முல்லைத்தீவு வட்டுவாகல் வீதிகளிலும் அடிக்கடி பயணத்தினை மேற்கொண்டு வருவதையும் அவதானிக்க முடிவதாக எமது பிராந்திய செய்திளாயர் தெரிவித்துள்ளார்.
