முல்லைத்தீவு - ஐயன்கன்குளத்தில் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் எட்டாவது பொலிஸ் நிலையமாக ஐயன்கன்குளம் பொலிஸ் நிலையம் நேற்று (02) திறந்து வைக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு, முள்ளியவளை, ஒட்டுசுட்டான், மாங்குளம், புதுக்குடியிருப்பு, மல்லாவி, வெலிஓயா ஆகிய பொலிஸ் நிலையங்கள் இயங்கி வருகின்ற நிலையில் எட்டாவது பொலிஸ் நிலையமாக ஐயன்கன்குளம் புதிய பொலிஸ் நிலையம் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர அதிதியாக கலந்துகொண்டு பொலிஸ் நிலையத்தை திறந்து வைத்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் பொது மக்களுக்கான பாதுகாப்பான பொலிஸ் சேவையை மேம்படுத்துகின்ற நோக்கில் ஐயன்கன்குளம் ,புத்துவெட்டுவான் போன்ற 6 கிராமசேவையாளர் பகுதிகளை உள்ளடக்கியதாக ஐயன்கன்குளம் புதிய பொலிஸ் நிலையம் நேற்று முதல் தனது சேவையை ஆரம்பிக்கிறது.
இந்த நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர, கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய காதர் மஸ்தான் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ,துணுக்காய் பிரதேச செயலாளர் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


