ஹிஷாலினியின் மரணம் மற்றும் வன்முறைகளுக்கு எதிராகவும் முல்லையில் கவனயீர்ப்பு போராட்டம்!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட றெட்பானா சந்திப்பகுதியில் நான்கு கிராமங்களை சேர்ந்த மக்கள் சிறுமியின் உயிரிழப்பிற்கு நீதிகோரியும் சிறுவர்கள்,பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராகவும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
மாணிக்கபுரம், இளங்கோபுரம், வள்ளுவர்புரம், பாரதிபுரம் கிராமத்தினை சேர்ந்த மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினர் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளதுடன் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பாரதி வட்டார இணைப்பாளர் வே.தியாகராசாவின் ஒழுங்கமைப்பில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தின் போது சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவோர் மீது சட்டநடவடிக்கை எடு, சிறவர்களை வேலைக்கு அமர்த்தாதே, துஸ்பிரயோகத்தினால் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும், கொலை செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்கவேண்டும் போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை தாங்கியவாறு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உபதவிசாளர் க.ஜெனமேஜெயந் உள்ளிட்ட கிராம அமைப்பின் தலைவர்கள் கலந்துகொண்டதோடு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் மற்றும் அரசாங்க அதிபருக்குமான மனு கையளிக்கப்பட்டுள்ளது.