நினைவு கல் உடைப்பு மூலம் சர்வதேசத்திற்கு தெரிவிக்கப்பட்ட செய்தி என்ன?
இலங்கையில் ராஜபக்சாக்களின் ஆட்சியானது தொடர்ச்சியாக தமிழ் சமுகத்தை மிலேச்சத்தனமான அடக்குமுறைக்குள் வைத்திருக்கவே முயலுகின்றது.அதன் சாட்சியமே முள்ளிவாய்க்கால் நினைவு கல்லை சிறிலங்கா இராணுவம் காணாமல் ஆக்கி நினைவு தூபியையும் இடித்து அழித்த நாகரிகமற்ற செயற்பாடு உறுதி செய்துள்ளது.
இவ்வாறு கனடா மார்க்கம் தொகுதி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நினைவு கல்லை அழித்த செயற்பாட்டின் மூலம் தமிழ் மக்களை தாம் கண்ணீர் விடுவதற்கு கூட ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்ற செய்தியை சர்வதேச சமுகத்திற்கு ராஜபக்சவின் சிறிலங்கா அரசு மீண்டுமொரு தடவை உரத்துக் கூறியுள்ளது.
மே 18 ஆம் திகதி உலகத் தமிழினம் தமிழின படுகொலை நினைவுநாளை அனுஷ்டிகக ஏற்பாடு செய்கையில் தாயகத்தில் தமிழின படுகொலை நினைவு வாரத்தின் முதல்நாளான மே 12 முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழ்மக்களின் ஏக்கத்தை நினவு கூர்ந்து அமைக்கப்பட்ட நினைவுத்தூபியை இலங்கை இராணுவத்தினர் காட்டுமிராண்டித்தனமாக அடித்து உடைத்துள்ளமையும் தமிழர்களின் இன் அழிப்பு நீதிக்கான வாசகங்கள் பொறிக்கப்பட்ட நினைவு கல்லை திருடர்கள் போன்று இரவோடு இரவாக காணாமல் ஆக்கியதும் மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 36/1 தீர்மானத்தின் நிலைமாறுகால நீதியில் நினைவு கூருவதற்கான உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அவ்சர்வதேச தீர்மானத்தை நிராகரித்து ஈழத்தில் தமிழர்களின் நினைவு கூரும் உரிமையை இலங்கை அரசாங்கம் புறக்க்கணிக்கின்றதாயின், இது சர்வதேச நாடுகளையும் உதாசீனப்படுத்தும் செயலாகவே காணப்படுகின்றது.
எமது ஒன்ராறியோ சட்டமன்றம் நிறைவேற்றியதமிழ் இனப்படுகொலை கல்வி வாரச் சட்டமானது, தாயகத்தில் நினைவுத்தூபி சிதைக்கப்பட்ட கடந்த மே 12 அன்று துணை ஆளுநர் ஒப்பந்தத்துடன் சட்டமூலமாகியமை ஈழத்தமிழர்களுக்கு ஆரோக்கியமான செய்தியே ஆகும்.
நாம் என்றும் ஈழத்தமிழர்களுக்கான நீதிக்காக குரல் கொடுப்போம்.சர்வதேச மனித உரிமை தீர்மானங்களை உதாசீனப்படுத்தும் இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும்.
அவுஸ்ரேலியா நியூ சவுத் வேல்ஸ சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஹக் மெக்டெர்மொட், ஒன்ராறியோ மாநில சட்டசபையின் இனப்படுகொலையின் கல்விவார சட்டத்தை சுட்டிக்காட்டி சர்வதேச சமுகம் தமிழினப்படுகொலையை அங்கீகரிப்பதில் பணியாற்ற வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளது ஆரோக்கியமான முன்னேற்றமாகும்.
தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இனப்படுகொலைக்கும் இன்றுவரை இடம்பெற்றுவரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கும் நீதியை பெற்றுக்கொடுத்து தமிழ் மக்கள் நிம்மதியான வாழ்வை ஈழத்தில் வாழ சர்வதேச தரப்புகளாகிய நாம் ஒன்றிணைந்து குரல் கொடுப்போம்.