சரியாக செயற்படுங்கள் - இல்லையேல் கிரீடம் பறிபோகும்! ராஜபக்ச அரசுக்கு எச்சரிக்கை
கோட்டாபய - மஹிந்த தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தின் ராஜகிரீடம் எந்த வேளையிலும் பறிக்கப்படலாம் என கொழும்பு அபயராமய விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் எச்சரித்துள்ளார்.
கொரோனா தொற்று தலைவிரித்தாடும் நிலையில் பஸில் ராஜபக்ச வெளிநாடு சென்றிருப்பதை ஏற்கமுடியாது எனவும் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
மஹிந்த ராஜபக்சவின் மீது நாட்டு மக்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள். அவரது தலையீட்டிலும் எமது வழிகாட்டலின் ஊடாகவுமே கோட்டாபய ராஜபக்சவுக்கு 69 இலட்சம் வாக்குகள் கிடைத்ததே தவிர மற்றவர்கள் கூறுகின்ற படியல்ல.
மக்களின் நம்பிக்கை இன்று குன்றிப் போகிறது. அதனை நிறுத்துவதற்காகவே நாங்கள் பேசுகின்றோம். இந்த அரசாங்கத்திற்கு கிடைத்த ராஜகிரீடம் இன்றும் எங்கள் கைகளில் தான் இருக்கின்றது.
அரசாங்கம் சரியாக செல்லாவிட்டால் நிச்சயம் கவிழும். அல்லது அந்தக் கிரீடத்தை இன்றுமொரு நபருக்கே சூட்டுவோம் என்ற எச்சரிக்கையையும் தெரிவிக்கின்றோம்.
கொரோனா நோயாளர்களை வீட்டிலிருந்தே சிகிச்சைப் பெறுவதற்கான திட்டமானது இலங்கையை பொறுத்தவரை பொருத்தமற்ற திட்டமாகும்.
இன்று பஷில் ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியிருக்கின்றார். அவர் மருந்து பெற்றுக்கொள்வதற்காகவே அமெரிக்கா சென்றதாக கூறப்பட்டாலும்
நாட்டின் சுகாதார கட்டமைப்பு மீது நம்பிக்கையற்றுத் தான் அவர் சென்றிருக்கின்றார் என்பது கண்டனத்திற்குரியதாகும் என்றார்.