சுரேஷ் சலேவின் விசாரணை தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட தகவல்
முன்னாள் அரச புலனாய்வு சேவை (SIS) பணிப்பாளர் சுரேஷ் சலே, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்தபோது சித்திரவதை செய்யப்பட்டார், ஆடைகள் களையப்பட்டார் அல்லது வேறுவிதமாகத் துன்புறுத்தப்பட்டார் என்ற குற்றச்சாட்டுகளை அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ நிராகரித்துள்ளார்.
இந்த விசாரணையானது அரசியல் தலையீடுகள் இன்றி, சட்டத்திற்கு முழுமையாக உட்பட்டு நடத்தப்படுவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜயதிஸ்ஸ, விசாரணையின்போது சலே கடுமையான துன்புறுத்தலுக்கும் அவமானத்திற்கும் உள்ளாக்கப்பட்டதாக அவரது மனைவி கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், அங்கு வழக்கமான சட்ட நடைமுறைகளே பின்பற்றப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சலேயின் தடுப்புக்காவல்
தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குக் கொண்டுவரப்படும் எந்தவொரு நபரும் ஒரு சாதாரண சந்தேக நபரைப் போலவே நடத்தப்படுகிறார் என்றும், சுரேஷ் சலேவுக்கு என எந்தவொரு தனித்துவமான அல்லது முறையற்ற வழிமுறைகளும் பயன்படுத்தப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்தின் கொள்கைப்படி யாருக்கும் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுவதோ அல்லது யாரையும் வேண்டுமென்றே அவமானப்படுத்துவதோ இல்லை என்றும், நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளே பின்பற்றப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, சலேயின் தடுப்புக்காவல் குறித்து அவரது குடும்பத்தினருக்கோ அல்லது சட்டப் பிரதிநிதிகளுக்கோ ஏதேனும் நியாயமான கவலைகள் இருந்தால், அதனை நீதிமன்றத்தில் முறையிட அவர்களுக்கு உரிமை உண்டு என்றும் அமைச்சர் நலிந்த தெரிவித்துள்ளார்.
சிஐடியின் அடுத்தகட்ட நடைமுறை
இதேவேளை, தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலும் வைத்தியசாலையிலிருந்து மீண்டும் சிஐடி காவலுக்குத் திரும்பப் போவதில்லை என சலேயின் சட்டக் குழுவினர் கூறியதாக வந்த செய்திகளுக்குப் பதிலளித்த அமைச்சர், தடுப்புக்காவலில் உள்ள ஒருவரின் காவல் தொடர்பான முடிவுகள் சந்தேக நபரின் விருப்பப்படி அல்லாமல், சட்ட மற்றும் மருத்துவ அதிகாரிகளாலேயே தீர்மானிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த வகையில், தேசிய வைத்தியசாலையின் மருத்துவ நிபுணர்கள் அவர் குணமடைந்துவிட்டார் என அறிவித்து விடுவித்தவுடன், சிஐடி தனது அடுத்தகட்ட சட்ட நடைமுறைகளைத் தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், விசாரணையின் போது சந்தேக நபர் வழங்கும் ஒத்துழைப்பைப் பொறுத்தே தடுப்புக்காவலின் காலம் அமையும் என்று குறிப்பிட்ட அமைச்சர், சந்தேக நபர் ஒத்துழைக்க மறுத்தால் விசாரணை நீடிக்கும் என்றும், ஒத்துழைத்தால் விரைவாக முடித்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
எனவே அவர் நிரபராதி என்றால், தனது பெயரைத் தூய்மைப்படுத்த புலனாய்வாளர்களுடன் முழுமையாக ஒத்துழைப்பதே சிறந்த வழி எனவும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |