அரசாங்கம் சர்வாதிகாரப் பாதையில் பயணிக்கிறது...! சாடும் நாமல் ராஜபக்ச
அரசாங்கம் சர்வாதிகாரப் பாதையில் பயணிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசியல் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து, தன் மீதும் எதிர்க்கட்சிகள் மீதும் பழியைப் போட்டு அரசாங்கம் தப்பிக்கப் பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரிக் கொள்கைகள்
வரிக் கொள்கைகளில் அடிக்கடி மாற்றங்களைச் செய்வதன் மூலம் சாதாரண உழைப்பாளிகள், நாளாந்த வருமானம் ஈட்டுவோர் மற்றும் மாதச் சம்பளக்காரர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை குறிப்பிட்ட சில தரப்பினருக்கு மாத்திரம் சலுகைகள் அள்ளிக் கொடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கக் கணக்குகளில் ட்ரில்லியன் கணக்கில் பணம் இருப்பதாகக் காட்டுவது மட்டுமே ஒரு அரசாங்கத்தின் வெற்றியல்ல என்றும் மற்றும் மாறாக புதிய தொழில்முனைவோரையும் செல்வத்தை உருவாக்கும் குடிமக்களையுமே அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சைபர் திருட்டு
அண்மையில் இடம்பெற்ற அரச நிதி சைபர் திருட்டு சம்பவங்களின் நஷ்டம், உயர்த்தப்பட்ட வரிகள் மூலமாக பொதுமக்கள் மீதே சுமத்தப்படுவதாக நாமல் குறிப்பிட்டுள்ளார்.
தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் மின்சாரக் கட்டண உயர்வுகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அரசாங்கம் எதிர்க்கட்சியினரை இலக்கு வைப்பதிலேயே கவனம் செலுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதால் மட்டும் நீதித்துறையின் தாமதங்களுக்கு தீர்வு கண்டுவிட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நீதிபதி வெற்றிடங்களை நிரப்புதல் மற்றும் புதிய நீதிமன்றங்களை உருவாக்குதல் மற்றும் நிபுணர் அறிக்கைகளை விரைவாகப் பெறுவதன் மூலமே வழக்குகளை விரைவுபடுத்த முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |