நாமல் ராஜபக்சவுக்கு மீண்டும் விளக்கமறியல் : நீதிமன்றம் அதிரடி உத்தரவு
புதிய இணைப்பு
சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு எயார்பஸ் வானூர்திகளை கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடு மற்றும் நிதித்தூய்தாக்கல் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் சந்தேகநபராக பெயரிடப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, நாமல் ராஜபக்சவை எதிர்வரும் 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (16) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அத்துடன் சந்தேகநபருக்கு பிணை வழங்குவது தொடர்பிலான உத்தரவு அன்றைய தினம் வழங்கப்படும் என்றும் நீதவான் அறிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த பின்னரே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
சட்டமா அதிபரின் ஆலோசனை
நீதிமன்றில் விடயங்களை சமர்ப்பித்த பிரதி மன்றாடியார் நாயகம் ஜனக பண்டார, இந்த சம்பவம் தொடர்பில் நாமல் ராஜபக்ச நான்காவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனைகள் கிடைக்கப்பெற்றுள்ளதால், இது தொடர்பான குற்றச்சாட்டுகளை தாமதமின்றி தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், இந்த விசாரணை நடவடிக்கைகளுக்காக எயார்பஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் பல தடவைகள் இலங்கைக்கு வருகை தந்து வாக்குமூலங்களை வழங்கியுள்ளதாகவும் பிரதி மன்றாடியார் நாயகம் மேலும் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
சர்ச்சைக்குரிய எயார்பஸ் (Airbus) விமான கொள்முதல் வழக்கில் சந்தேகநபரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, சிறைச்சாலை அதிகாரிகளால் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
நீதிமன்றம் பிறப்பித்த முந்தைய உத்தரவுக்கமைய, சிறைச்சாலை அதிகாரிகள் நாமல் ராஜபக்சவை சற்றுமுன்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
இந்தநிலையில் குறித்த வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முதலாம் இணைப்பு
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நாமல் : பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தை சுற்றி பாதுகாப்பை பலப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று (16) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையிலேயே இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று (16) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
கோட்டை நீதவான் நீதிமன்றம்
இந்தநிலையில் குறித்த விவகாரம் தொடர்பில் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இதேவேளை சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு எயார்பஸ் ரக வானூர்திகளைக் கொள்முதல் செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடு மற்றும் நிதித்தூய்தாக்கல் விவகாரம் தொடர்பில்,நாமல் ராஜபக்சவை சந்தேகநபராகப் பெயரிடுமாறு சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |