மொட்டுக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
"எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் (SLPP) பிரதமர் வேட்பாளராக நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) முன்னின்று தேர்தலையும் அவரே வழிநடத்துவார் என ராஜபக்ச குடும்பத்தின் பேச்சாளராகக் கருதப்படும் ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க (Udayanga Weeratunga) தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், "மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) ஆலோசனையின் பிரகாரம் விமல் வீரவன்சவைச் (Wimal Weerawansa) சந்தித்துப் பேச்சு நடத்தினேன்.
பிரதமர் வேட்பாளர்
இப்போது விமல் தரப்பு தனிவழி சென்றாலும் அதிபர் தேர்தலில் அவர்களின் ஆதரவு சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கே கிடைக்கப்பெறும்.
வாசுதேவ நாணயக்காரதான் (Vasudeva Nanayakkara) எமது பக்கம் முதலில் வருவார். பின்னர் உதய கம்மன்பிலவுக்கும் (Udaya Gammanpila) வரவேண்டியேற்படும். திலீப் ஜயவீரவும் கோட்டாபய ராஜபக்சவுடன்தான் (Gotabaya Rajapaksa) இருக்கின்றார்.
அந்தவகையில் சர்வஜன அதிகாரத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் வந்து, மொட்டுக் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவார்கள்.
நாடாளுமன்றத் தேர்தல்
இன்னும் இரு வாரங்களில் இது நடக்கும். அதேவேளை, அதிபர் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும் என நான் இன்னும் நம்புகின்றேன்.
அவ்வாறு நடந்தால் தம்மிக்க பெரேரா (Dhammika Perera) அல்லது நாமல் ராஜபக்ச ஆகியோரில் ஒருவர் கம்பஹா (Gampaha) மாவட்டத்தில் களமிறங்குவார்கள். அந்தத் தேர்தலில் மொட்டுக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக நாமல் ராஜபக்ச முன்னின்று தேர்தலையும் அவரே வழிநடத்துவார்." என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |