நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட பதவி..!
குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால கொள்கைகளை வகுப்பதில் முன்னுரிமைகளை அடையாளம் காணும் தேசிய சபை உபகுழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நேற்று (07) நியமிக்கப்பட்டார்.
நேற்றைய தினம் நாடாளுமன்ற தொகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் நாமல் ராஜபக்சவுக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.
தலைவர் பதவிக்கு நாமல் ராஜபக்சவின் பெயரை நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் முன்மொழிந்தார், அதை நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் உறுதிப்படுத்தினார்.
நவீனமயமாக்கல்
அத்துடன், குறித்த துணைக் குழுவின் உறுப்பினர்கள் அரச கொள்கைகளை உருவாக்குவது குறித்து தங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.
பொது நிர்வாகத்தின் நவீனமயமாக்கல், சுகாதாரக் கொள்கைகளின் நவீனமயமாக்கல், கல்விக் கொள்கைகளின் நவீனமயமாக்கல், மீன்பிடி மற்றும் உணவுக் கொள்கைகளின் நவீனமயமாக்கல், மின்சாரம் மற்றும் எரிசக்தி நவீனமயமாக்கல் தொடர்பான யோசனைகள் மற்றும் முன்மொழிவுகளைப் பெறுவதற்கு துணைக் குழுவின் முன் தொடர்புடைய துறைகளில் நிபுணர்களை அழைக்க உறுப்பினர்கள் இணக்கம் வெளியிட்டனர்.
குறித்த ஆலோசனைகளின்படி, குறுகிய கால முன்மொழிவுகளை ஒரு மாத காலத்திலும், நடுத்தர கால முன்மொழிவுகளை இரண்டு மாதங்களுக்குள்ளும், நீண்ட கால முன்மொழிவுகளை மூன்று மாதங்களுக்குள்ளும் சமர்ப்பிக்க துணைக்குழு உறுப்பினர்கள் இனங்கினர்.
இதேவேளை, அமைச்சர் நசீர் அஹமட் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான பவித்ரா வன்னியாராச்சி, சாகர காரியவசம், வஜிர அபேவர்தன, அசங்க நவரத்ன, மனோ கணேசன், அலி சப்ரி ரஹீம், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ஏ.எல்.எம். அதாவுல்லா மற்றும் நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் குஷாணி ரோஹனதீர ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.