யாழில் சிக்கிய 1.5 பில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் : வெளியான தகவல்
யாழ்ப்பாணம் - மாதகல் கடற்கரைப் பகுதியில் இன்று (27) அதிகாலை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகுதியின் மொத்தப் பெறுமதி 1.5 பில்லியன் ரூபாய் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது மீட்டெடுக்கப்பட்ட இந்த போதைப்பொருள் தொகுதி தொடர்பாக இன்று (27) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட போதைப்பொருள் தொகுதியின் மொத்த அளவு சுமார் 81 கிலோகிராம், அதற்குள் சுமார் 35 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் சுமார் 45 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் அடங்குகின்றது.
மிகப்பெரிய போதைப்பொருள் தொகுதி
அண்மைக் காலங்களில் வடக்கிலிருந்து கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகுதி இதுவாகும். 2025 ஆம் ஆண்டில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது மீட்கப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் 75 பில்லியன் ரூபாய்.
இந்த ஆண்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் பொறுப்பேற்கப்பட்ட போதைப்பொருள் தொகுதிகளின் பெறுமதி 56 பில்லியன் ரூபாய்.” என தெரிவித்தார்.
இதேவேளை இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த கடற்படைத் தளபதி, வடக்கு கட்டளை பிரிவுக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலுக்கு அமைய, பல குழுக்கள் இணைந்து இந்த முற்றுகையை மேற்கொண்டன.
அதற்கமைய, கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருள் தொகுதி யாழ்ப்பாண காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் உதவியுடன் மேலதிக பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
