தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருளுடன் சிக்கிய படகு : எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
தேவேந்திரமுனைக்கு தெற்கே உள்ள சர்வதேச கடற்பரப்பில் ஹெரோயின் மற்றும் ஐஸ் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருட்களை கடத்திச் சென்ற படகொன்றுடன் 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் இலங்கை கடற்படையினர் முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கொடியற்ற குறித்த படகு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுடன் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைப்பதற்காக தற்போது கரைக்குக் கொண்டுவரப்படுகின்றது.
கைப்பற்றப்பட்டுள்ள போதைப்பொருட்கள்
இதேவேளை "முழு நாடுமே ஒன்றாக" தேசிய செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இதுவரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின் ஊடாக, 116 பில்லியன் ரூபாய்க்கும் (11,600 கோடி ரூபா) அதிகமான பெறுமதியுடைய போதைப்பொருட்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில், 4 வெளிநாட்டுப் படகுகள் உட்பட மொத்தம் 66 படகுகளும், 18 வெளிநாட்டவர்கள் உட்பட 379 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |