அரச தலைவர் கோட்டாபய விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
ஊழல், மோசடிகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் அதற்காக, அனைத்து அதிகாரிகளும் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டுமென்றும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) வலியுறுத்தியுள்ளார்.
சிறிலங்கா இராணுவத்தின் 72ஆவது வருடப் பூர்த்தியையொட்டி, இன்றைய தினம் (10) அநுராதபுரம் – சாலியபுர கஜபா ரெஜிமென்ட் தலைமையகத்தில் இடம்பெற்ற இடம்பெற்ற அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு உரையாற்றும் போதே, அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,
“கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக இந்நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. இருப்பினும், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள், பொதுமக்களுக்காகப் பாரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மக்களுக்கு உறுதியளித்தவாறு, புதிய அரசியலமைப்பு மற்றும் புதிய தேர்தல் முறைமையை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
முப்படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினரின் மன உறுதியை அதிகரிக்கச் செய்து, அவர்களுக்கான உத்தியோகபூர்வ அதிகாரங்களை முறையாக வழங்கி, தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்க, கடந்த இரண்டு வருடக் காலப்பகுதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மீண்டும் நாட்டுக்குள் பயங்கரவாதமோ அல்லது மதத் தீவிரவாதச் செயற்பாடுகளோ ஏற்படாத வகையில் நாட்டைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, அவர்கள் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகின்றனர்” என்று கூறினார்.