இலங்கை, புலம்பெயர் தமிழர்களை பாதித்த விடயம் - மீள்பரிசீலனைக்கு பரிந்துரை
திருமணம் தொடர்பில் உருவாக்கப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்துவதன் மூலம் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள், தத்தமது அடையாளங்களை ஒத்தவர்களை திருமணம் செய்ய, முடியாத அபாய நிலையே உருவாக்கப்படும் என்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ( Sivagnanam Shritharan).
வெளிநாட்டவர்கள் இலங்கையில் விவாகம் செய்து கொள்வது தொடர்பில் தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்றிக்கையை மீள் பரிசீலனைக்குட்படுத்துமாறு நீர்ப்பாசன அமைச்சரும், தேசிய பாதுகாப்புக்கான இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்ஷவுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதமொன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.
இச்சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் எவையும் சிங்கள மக்களின் திருமணச் சடங்குகளில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை. மாறாக இலங்கையில் வாழும் தமிழர்களையும், புலம்பெயர் நாடுகளில் வதியும் தமிழர்களையுமே பாதிப்பதாக அமைந்துள்ளது.
ஆனால் தமிழர்களைப் பொறுத்தமட்டில் தனிமனித வாழ்வின் பிரதான அங்கமாக உள்ள திருமணம் என்பது மத, மொழி, கலாசார, பண்பாட்டு விழுமியங்களின் அடிப்படைக் கூறாக, அக்கூறுகளிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாத ஓர் அடையாளமாகவே காலம்காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது.
பல்வேறு வழிகளிலும் வஞ்சிக்கப்பட்டுவரும் தமிழர்களின் இயல்பான வாழ்வில் தாக்கம் செலுத்தும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள, இச்சுற்றறிக்கையை மீள்பரிசீலனை செய்யுமாறு அவர் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.