ஜனவரி 2027 டயர்களுக்கான புதிய இறக்குமதி தரநிலைகள்: ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பயணிகள் கார்களுக்கான டயர்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கான நியூமாட்டிக் டயர்களுக்கு புதிய தரநிலைப்படுத்தல் மற்றும் தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த புதிய விதிமுறைகள் 2027 ஜனவரி 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1969ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ், நிதி அமைச்சராக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் இந்த விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க
2026 ஒக்டோபர் 1ஆம் திகதிய 2508/27ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம், 2024 மே மாதம் வெளியிடப்பட்ட தரநிலைப்படுத்தல் மற்றும் தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் வாகன டயர்களின் இரண்டு புதிய வகைகள் விதிமுறைகளின் அட்டவணை B-யில் சேர்க்கப்பட்டுள்ளன.
- பயணிகள் கார்களுக்கான டயர்கள் - HS Code 4011.10.90 - SLS 1212 தரநிலைக்கு இணங்க வேண்டும்.
- முச்சக்கர வண்டிகளுக்கான நியூமாட்டிக் டயர்கள் - HS Code 4011.90.10 - SLS 1347 தரநிலைக்கு இணங்க வேண்டும்.
மேலும், இந்த புதிய விதிமுறைகள் 2027 ஜனவரி 1ஆம் திகதி அல்லது அதற்குப் பின்னர் இலங்கையின் எந்தவொரு துறைமுகம் அல்லது விமான நிலையத்தையும் வந்தடையும் பொருட்களுக்கு பொருந்தும் என வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |