பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து புரத குக்கீஸ்: இலங்கை விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு
அமெரிக்காவின் Southern Illinois University Carbondale பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியலாளராக பணியாற்றும் இலங்கையைச் சேர்ந்த கலாநிதி லஹிரு ஜயகொடி தலைமையிலான விஞ்ஞானிகள் குழு, பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பயன்படுத்தப்பட்ட தாவரப் பொருட்களைப் பயன்படுத்தி புரதம் நிறைந்த, உண்ணக்கூடிய 3D அச்சிடப்பட்ட குக்கீகளை தயாரிக்கும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார்.
நாசா நிறுவனத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்படும் இந்த ஆய்வில், குடிநீர் மற்றும் குளிர்பான போத்தல்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் PET பிளாஸ்டிக், பயன்படுத்தப்பட்ட சோளத் தாவரப் பகுதிகள் உள்ளிட்ட உயிரியல் கழிவுகள் மூலப்பொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.
முதலில் பிளாஸ்டிக் மற்றும் தாவரக் கழிவுகள் அதிக வெப்பநிலை மற்றும் அழுத்தத்தின் கீழ் நீர் மற்றும் ஒட்சிசனுடன் இணைக்கப்பட்டு, நுண்ணுயிரிகளால் செரிக்கக்கூடிய சிறிய மூலக்கூறுகளாக மாற்றப்படுகின்றன.
கலாநிதி லஹிரு ஜயகொடி
பின்னர் விசேடமாக உருவாக்கப்பட்ட பாக்டீரியா அல்லது ஈஸ்ட் வகைகள் சேர்க்கப்பட்டு, இந்தக் கலவைகள் புரதம், கொழுப்பு மற்றும் அத்தியாவசிய சர்க்கரைகள் கொண்ட ஊட்டச்சத்து நிறைந்த உயிர்ப்பொருளாக மாற்றப்படுகின்றன.

அதன் பின்னர் தயாரிக்கப்படும் கலவை நார்ச்சத்து, மாவுச்சத்து மற்றும் சுவையூட்டிகளுடன் கலந்து 3D உணவு அச்சுப்பொறி மூலம் குக்கீ வடிவில் அடுக்கடுக்காக அச்சிடப்பட்டு, இறுதியில் சுட்டு உணவாக தயாரிக்கப்படுகிறது.
“µBites” என பெயரிடப்பட்டுள்ள இந்தக் குக்கீகளின் உற்பத்திச் செலவு ஒரு கிலோகிராமுக்கு சுமார் 60 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்டகால விண்வெளிப் பயணங்களில், குறிப்பாக செவ்வாய் கிரகத்துக்கான எதிர்காலப் பயணங்களில், விண்வெளி வீரர்களுக்குத் தேவையான உணவை தயாரிப்பதற்கும் இந்தத் தொழில்நுட்பம் உதவக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை
அத்துடன், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் உணவுப் பொருட்களைப் பெறுவது கடினமாகும் பகுதிகளிலும் இத்தொழில்நுட்பம் பயன்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2050ஆம் ஆண்டளவில் உலகளாவிய உணவுத் தேவை அதிகரிக்கும் நிலையில், உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்வதற்கும் நுண்ணுயிரிகளை அடிப்படையாகக் கொண்ட இத்தொழில்நுட்பம் பங்களிக்கக்கூடும் என கலாநிதி லஹிரு ஜயகொடி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மனிதர்களில் மேலதிக பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான நிறுவன ரீதியான அனுமதி பெறப்பட வேண்டியுள்ளது.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், தயாரிக்கப்பட்ட குக்கீகளின் வாசனை திருப்திகரமாக இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |