மாண்டஸ் புயலை தொடர்ந்து வங்கக்கடலில் அறியப்பட்ட புதிய புயல் சின்னம்
தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த மாண்டஸ் புயல் தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்த நிலையில், எதிர்வரும் 13 மற்றும் 16 திகதிகளில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி புயல் சின்னம் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளனர்.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்து மாண்டஸ் புயல், மாமல்லபுரத்திற்கு அருகே சனிக்கிழமை அதிகாலை கரையைக் கடந்த நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு படிப்படியாக வலுக்குறைந்ததுள்ளது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் மேலும் இரண்டு நாள்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய காற்றழுத்த மையம்

இந்நிலையில், தற்போது, வங்கக் கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஸ்கைமேட் வானிலை மைய தலைவர் மகேஷ் பலாவத் கூறியிருப்பதாவது “தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வரும் 13 ஆம் திகதிக்கு பின்னர் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாக வாய்ப்புள்ளது.
மாண்டஸ் புயல் உருவான அதே பகுதியில் இந்த புதிய காற்றழுத்த மையம் உருவாக வாய்ப்புள்ளது. எனினும், இது புயலாக உருவாக வாய்ப்புள்ளதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மிதமானது முதல் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.
சென்னை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 23 டிகிரி செல்சியல் முதல் 28 செல்சியஸ் வெப்பநிலை காணப்படும்.” என தெரிவித்திருந்தார்.