ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துக்கள் உக்ரைனுக்கு..! புடினுக்கு பேரிடி
உக்ரைனுக்கு உதவும் வகையிலும், போர் நிலையை முடிவுக்குக் கொண்டு வரவும் ஐரோப்பிய ஒன்றியம் முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களை பயன்படுத்தும் புதிய திட்டத்தை முன்மொழிந்துள்ளது.
இந்த திட்டத்திற்கு அமெரிக்கா முழுமையாக ஆதரவு வழங்கும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஐரோப்பிய ஆணையம், ரஷ்யாவுக்கு எதிரான அழுத்தத்தை உருவாக்குவதற்காக, 185 பில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள முடக்கப்பட்ட சொத்துகளை உக்ரைனுக்காக பயன்படுத்த அனுமதிக்கும் திட்டத்தை பரிந்துரைத்துள்ளது.
ரஷ்யா எதிர்ப்பு
ஐரோப்பியாவில் இதுவரை ரஷ்ய சொத்துகள் சுமார் 210 பில்லியன் யூரோக்கள் அளவில் முடக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ரஷ்யா, தனது சொத்துக்கள் உக்ரைனுக்காக பயன்படுத்தப்படுவதை கடுமையாக எதிர்க்கிறது.
2022ல் உக்ரைன் மீது போர் தொடங்கியபோது, அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் ரஷ்யாவின் மத்திய வங்கி மற்றும் நிதியியல் பரிவர்த்தனைகளை தடை செய்தனர். இதனால் ரஷ்யாவிற்கு சொந்தமான சுமார் 300 பில்லியன் டொலர் தொகை புடினால் தொட முடியாத நிலையில் உள்ளது.
புடின் மீதான அழுத்தம்
இந்த சொத்துக்களை உக்ரைனுக்காக பயன்படுத்துவது தொடர்பாக பெல்ஜியத்தின் கவலை காரணமாக இதுவரை திட்டம் நிறைவேறவில்லை. ரஷ்யாவின் பெரும்பாலான சொத்துகள் பெல்ஜியத்திலேயே முடக்கப்பட்டுள்ளன.

சமீபத்தில் பெல்ஜிய விமான நிலையங்கள் மற்றும் இராணுவத் தளங்களில் மர்ம ட்ரோன் அத்துமீறல்கள் நிகழ்ந்தது, இது முடக்கப்பட்ட சொத்துக்களில் தடையிட வேண்டாமெனும் எச்சரிக்கையாகவே கருதப்படுகிறது.
எவ்வாறாயினும், ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளில் நிகழும் ட்ரோன் அச்சுறுத்தல்களில் தங்கள் தொடர்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், அமெரிக்கா ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்கனவே தடைகள் விதித்து தடுத்து நிறுத்திய நிலையில், இந்த முடக்கப்பட்ட சொத்துகளை உக்ரைனுக்கு பயன்படுத்தும் திட்டத்திற்கு அமெரிக்காவின் ஆதரவு, புடின் மீதான அழுத்தத்தை இன்னொரு முறையாக அதிகரிக்கும் எனவும் பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |