சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சி தீவிர முடிவு
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய அவர், ஜகத் விக்ரமரத்ன சபாநாயகர் பதவி வகிக்க தகுதியற்றவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சபாநாயகர் முன்பு சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை காரணமின்றி நிராகரித்ததாக குற்றம்சாட்டிய அஜித் பி. பெரேரா, இவ்வாறு நடப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் பொறுப்புத் தன்மையையும் பாதிக்கிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.
வலுக்கும் சர்ச்சை
இதற்கு முன், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் எதிர்க்கட்சி பிரதம கொறடா கயந்த கருணாதிலக ஆகியோரும் சபாநாயகரின் நடத்தை குறித்து அதிருப்தி தெரிவித்திருந்தனர்.
சமீபத்தில் பிரதி அமைச்சர் அருண ஜயசேகர மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான தீர்ப்பைத் தொடர்ந்து, சபாநாயகரின் நடைமுறைகள் குறித்த சர்ச்சை மேலும் தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
