பஸில் வந்துவிட்டார் ஏன் குறையவில்லை எரிபொருள் விலை? சஜித் அணி கேள்வி
எரிபொருள் விலை குறைக்கப்பட்டால் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்யைில்லா பிரேரணையை கைவிடுவோம் என சஜித் தரப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூறுகையில்,
அமெரிக்கா சென்றுள்ள பசில் ராஜபக்ஷ நாடு திரும்பினால் எரிபொருள் விலை குறைவடையும் என்று அமைச்சர்கள் சிலர் கூறினர். தற்போது பசில் ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளதால் எப்போது எரிபொருள் விலையை குறைக்கப் போகிறீர்கள்?
நல்லாட்சி அரசாங்கத்தில் எரிபொருள் விலை இரண்டு ரூபாவால் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிராக போராடிய தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினாலேயே இன்று எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அவர் ஜனாதிபதியாக பதவி வகித்தபோது எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிராக போராடிய மீனவர்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இன்னும் அதேபோன்று மீனவர்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
எனவே அரசாங்கம் அவர்களுக்கான துரித நிவாரணத்தை வழங்க வேண்டும்.
ஆகவே பசில் ராஜபக்ஷ வந்துவிட்டார் எனக் கூறி அவரது கைகளில் பந்தை மாற்றிவிட்டு ஏனையோர் தப்பிக்க முயலக்கூடாது.
மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி ஊடகங்கள் முன்னால் முதலைக்கண்ணீர் வடிப்பதை தவிர்த்து தலைமைத்துவத்திடம் நேரடியாக சென்று பேசி மக்களுக்கான நிவாரணத்தைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம் எனத் தெரிவித்தார்.