இலங்கையின் அரசியல் நிலை குறித்து கருத்து வெளியிட முடியாது : சாண்டிலே எட்வின் ஷால்க் தெரிவிப்பு!
இலங்கையின் அரசியல் நிலை குறித்து வெளிநபராக கருத்து தெரிவிக்க விரும்பவில்லையென இலங்கைக்கான தென் ஆபிரிக்க உயர்ஸ்தானிகர் சாண்டிலே எட்வின் ஷால்க் தெரிவித்துள்ளார்.
அது பொருத்தமற்ற செயல் என மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றதன் பின்னர், ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த சாண்டிலே எட்வின் ஷால்க், ”இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க ஆகிய நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இலங்கை - தென் ஆபிரிக்க உறவு
இரு நாடுகளாலும் ஒப்புக் கொள்ளப்பட்ட செயல்முறைகளை நாம் கொண்டுள்ளோம்.
இலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அரசாங்கங்களுக்கிடையிலான கூட்டாண்மை மன்றமொன்று உள்ளது.
இந்த மன்றத்தின் 10 ஆவது ஆண்டு பூர்த்தி அடுத்த வருடம் கொண்டாடப்படவுள்ளது.
இலங்கைக்கு பயணிக்கவுள்ள தென் ஆபிரிக்க பிரதிநிதிகள்
இதற்காக, தென் ஆபிரிக்க அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த ஆண்டு இலங்கைக்கு பயணிக்கவுள்ளது.
இரு நாடுகளுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது எமது முதன்மையான நோக்கமாக உள்ளது.
அரசாங்கங்களுக்கிடையில் மாத்திரமின்றி மக்களோடு மக்களுடனான உறவையும் வலுப்படுத்துவதில் நாம் ஆர்வமாக உள்ளோம்.
சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் திட்டம்
தென் ஆபிரிக்க சுற்றுலாப்பயணிகளை இலங்கைக்கு ஈர்ப்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கையில் ரக்பி விளையாட்டுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். இதன் மூலம், இரு நாடுகளுக்கிடையிலான உறவை மேலும் மேம்படுத்த முடியும்.
இலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்துவதன் மூலம் இரு நாட்டவரும் நன்மை அடைய வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |