வெடுக்குநாறி மலை அராஜகத்திற்கு எதிராக மட்டக்களப்பில் அகிம்சைப் போராட்டம்
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில், சிவராத்திரி நாளில் மதவழிபாட்டுரிமை மறுக்கப்பட்டமைக்கும், காவல்துறையினரின் அராஜகத்திற்கும் எதிராக மட்டக்களப்பில் அகிம்சைப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இன்று (10) காலை மட்டக்களப்பு - காந்தி பூங்கா முன்றலில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் அன்றைய தினம் இரவு 6 மணிக்கு பின்னர் பக்தர்கள் பூஜை வழிபாடுகளை மேற்கொள்ள காவல்துறையினர் தடை விதித்திருந்தனர்.
அமைதிப் போராட்டம்
இந்தநிலையில் காவல்துறையினரின் தடைகளை மீறி வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் காவல்துறையினரின் அராஜகத்தினால் பூஜை வழிபாடுகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டதுடன், ஆலய நிர்வாகத்தினர் உள்ளிட்ட வழிபாடுகளில் கலந்து கொண்ட 7பேர் கைது செய்யப்பட்டனர்.
காவல்துறையினரின் இந்த செயற்பாடுகளை கண்டிக்கும் முகமாகவே இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட அமைதிப் போராட்டத்தில் தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது “தமிழர் வழிபடும் உரிமையை தடுக்கும் அரசைக் கண்டிக்கின்றோம்“, “ஆதி சிவன் கோயில் நிலத்தை அழிக்காதே வெளியேறு“, “வெடுக்குநாறி ஆதிசிவன் சிவராத்திரி பூஜையை தடுத்த படையினரின் அராஜகத்தைக் கண்டிக்கின்றோம்“, “எங்கள் மலையில் எங்களுக்கு உரிமை இல்லை“போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |