அமெரிக்காவின் தடையால் வாழ்வாதாரத்தை இழக்கப்போகும் வடக்கு மக்கள்
நீலக்கால் நீந்தும் நண்டின் இறக்குமதியை அமெரிக்கா தடை செய்வதால் வடக்கில் 5 தொழிற்சாலைகள் மூடப்படும் துர்ப்பாக்கிய நிலைக்குள் தள்ளப்படுவதாகவும், பல்லாயிரம் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழக்க உள்ளதாகவும் வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா சுட்டிக்காட்டி உள்ளார்.
இன்றையதினம்(04) யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிரதான ஏற்றுமதி சந்தை அமெரிக்கா
இன்று கடற்றொழிலாளர்களுடைய வாழ்வாதாரத்தை நீலக்கால் நீந்தும் நண்டுகள் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன. இந்த நண்டுகளின் பிரதான ஏற்றுமதி சந்தையாக அமெரிக்கா காணப்படுகின்றது.
அமெரிக்காவானது இந்த நீலக்கால் நீந்தும் நண்டின் இறக்குமதியை எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து நிறுத்துவதாக அறிவித்திருக்கின்றது. வடமாகாணத்தில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள் இந்த நண்டு பதினிடும் கம்பெனியால் தமது வாழ்வாதாரத்தை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
அதைவிட 6000-க்கு மேற்பட்ட கடற்றொழில் குடும்பங்கள் வடக்கு மாகாணத்தில் இந்த நண்டு தொழிலை பிரதான தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர். வடக்கின் மிகப்பெரிய ஏற்றுமதி பொருளாதாரமாக இந்த நண்டு காணப்படுகின்றது.
இந்த பதப்படுத்தப்பட்ட நண்டு சதையானது பிரதான ஏற்றுமதியாக அமெரிக்காவுக்கே சந்தைப்படுத்தப்படுகிறது. அமெரிக்க அரசாங்கமானது இதற்கு தடை விதிப்பதற்கான காரணம் இலங்கை அரசாங்கம் அல்லது கடற்றொழில் சார்ந்த நிறுவனங்கள் அல்லது ஆராய்ச்சி நிறுவனங்கள் சரியாக இலங்கையில் செயல்படவில்லை என்பதுவே ஆகும். இது இன்று வடக்கு கடற்றொழிலாளர்களையே பாதித்திருக்கின்றது.
ஆமைகளை பிடிப்பதால் வந்த வினை
ஐந்து தொழிற்சாலைகளை மூடும் நிலைக்கு அரசாங்கமும் கடற்றொழில் சார் திணைக்களங்களும் தள்ளியுள்ளன. NOAA என்ற நிறுவனத்தின் ஆய்வுகளின் அடிப்படையில், இலங்கை கடலிலே ஆமை போன்ற பாலூட்டிகளை முறையற்ற விதத்தில் பிடிப்பதனால் இந்த நீலக்கால் நண்டுகளின் சதையை அமெரிக்க அரசாங்கம் கொள்முதல் செய்வதை நிறுத்தி இருக்கின்றது.
அந்த பாலூட்டிகளை பிடிப்பதில்லை என்று இலங்கையில் சட்டங்கள் இருந்தாலும் அதை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் பின்னிற்கின்றது. அல்லது அதற்கான ஆவணங்கள் சரியாக இல்லை என்ற காரணத்தினால் தான் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து இந்த இறக்குமதியை அமெரிக்க அரசாங்கம் தடை செய்திருக்கின்றது.
சட்டவிரோத தொழில்களை கட்டுப்படுத்துவதற்கு எத்தனை சட்டங்கள் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டாலும் வடக்குக் கடற்றொழிலாளர்களை மாற்றான்தாய் மனப்பான்மையோடு தான் இலங்கை அரசாங்கங்கள் இன்று வரைக்கும் பார்த்து வருகின்றன.
தோளோடு தோள் நின்றவர்கள் தற்போது ஏன் மௌனம்
இந்த நீலக்கால் நண்டு தொழிலினை வடக்கிலேயே 95 சதவீதமான கடல் தொழிலாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். புத்தளத்தில் வெறுமனே ஐந்து சதவீதமான தொழிலாளர்களே மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தான் இந்த அரசாங்கமும் அரசாங்கத்தில் இருக்கின்ற அதிகாரிகளும் இந்த விடயத்தில் கவனயீனமாக, கரிசினை இல்லாமல் செயற்படுகின்றார்கள்.
சீன கடல் அட்டை பண்ணையானது கடற்றொழிலாளர்களை பாதிக்கின்றது என கடந்த ஆட்சியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டபோது தற்போதைய கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரனும், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனும் எம்முடன் தோளோடு தோள் நின்று போராடினார்கள். தற்போது அதைப்பற்றி மௌனம் காப்பது ஏன்? அன்று பிழையான கடல் அட்டை பண்ணை இன்று சரியாக இருக்கிறதா என்று அவர்கள் இருவரையும் பார்த்து கேட்கின்றேன்.
கடந்த காலங்களில் சட்டவிரோத கடற்றொழில்களுக்கு எதிராக எம்முடன் இணைந்து போராடி வந்த சந்திரசேகரன் தற்போது அமைச்சராகி உள்ளார். ஆனால் அவர் அமைச்சராகிய பின்னர் அத்தனை சட்டவிரோத தொழில்களையும் அங்கீகரித்துக் கொண்டு எங்களை கருவறுக்கின்றார். எனவே இந்தப் பிரச்சினைகள் அனைத்திற்கும் விரைவில் தீர்வு வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
