திலீபனின் நினைவேந்தல் ஒரு கட்சிக்குரியதல்ல: சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம் சுட்டிக்காட்டு
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஒரு அரசியல் கட்சிக்குரியதல்ல எனவும் அது பொது அமைப்புக்களுக்கூடாகவே முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியுமான சி. அ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அதன்படி, நினைவேந்தல் பொது நிகழ்வாக நடத்தப்படல் வேண்டும் ஒரு கட்சி மட்டும் ஆதிக்கம் செலுத்துவது ஏற்கத்தக்தல்ல என்ற விமர்சனம் நீண்ட காலமாகவே இருந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொது அமைப்புகள்
இவ்விடயம் தொடர்பில் மேலும் விளக்கமளித்த அவர், “ நினைவேந்தல்களை பொது அமைப்பு ஒன்று முன்னெடுக்கும் போது பொது நிறுவனங்கள் மட்டுமல்ல கட்சிகளும் ஆர்வமுடன் பங்கேற்கும் நிலை உருவாகும்.
கட்சி முரண்பாடுகளும் அங்கு மேலெழும்பாது. குறைந்தபட்சம் கட்சிகளும், பொது அமைப்புகளும் இணைந்து ஒரு நினைவேந்தல் குழுவை உருவாக்கி அதனை மேற்கொண்டிருக்கலாம். அவ்வாறு ஒழுங்குபடுத்தினால் நினைவேந்தல் நிகழ்வு சர்ச்சைகள் பெரியளவிற்கு இல்லாமல் போயிருக்கும்.
அனுமதி மறுப்பு
தியாக தீபம் திலீபனுக்கு நினைவேந்தலில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல.
தேசிய மக்கள் சக்தி விரித்த வலைக்குள் விழுந்தமை, தமிழ்த் தேசிய சக்திகளை ஆதரவாகவும், எதிராகவும் இரு கூறுகளாகப் பிரித்தமை, நினைவேந்தலின் மகிமை குறைக்கப்பட்டமை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகிமை குறைக்கப்பட்டமை அதனால் ஏற்பட்ட முக்கிய பாதிப்புக்களாகும்.
எனவே தமிழ்த் தேசிய சக்திகள் இவற்றையும் கவனத்தில் கொண்டு எதிர்காலத்தில் நினைவு கூரல்களை ஒழுங்கு செய்வது ஆரோக்கியமானதாக இருக்கும்.” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
