இஷாரா செவ்வந்தியை அழைத்து வர நேபாளத்துக்கு விரைந்த விசேட அதிரடிப்படையினர்!
நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தியை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக விசேட அதிரடிப் படையைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் நேபாளத்துக்கு சென்றுள்ளனர்.
இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு உதவும் வகையில் குறித்த இரு அதிகாரிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து சந்தேக நபர்கள் நேற்று (14.10.2025) கைது செய்யப்பட்ட நிலையில், இன்று அவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலி கடவுச்சீட்டு
“கணேமுல்ல சஞ்சீவ” கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி நேற்று (14.10.2025) நேபாளத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டார்.
அவருடன் மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், செவ்வந்தி தன்னைப் போன்ற யாழ்ப்பாணப் பெண்ணின் பெயரில் தயாரிக்கப்பட்ட போலி கடவுச்சீட்டைப் யன்படுத்தி ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்ததாக விசாரணைகளில் மேலும் தெரியவந்தது.
5 மில்லியன் இலஞ்சம்
மேலும், கைது செய்யப்பட்ட நால்வருள், குற்றக் குழு உறுப்பினர்களில் ஒருவரான "கம்பஹா பபா" எனப்படுபவரும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையின் போது இலங்கை அதிகாரிகளுக்கு 5 மில்லியன் ரூபாயை இலஞ்சமாக வழங்க முற்பட்ட நிலையில் அது நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்கள் நேபாள அதிகாரிகளின் காவலில் உள்ள நிலையில் அவர்கள் இன்று இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
