பொறுப்புக்கூறலில் நழுவல் போக்கு - அமெரிக்காவின் இராஜதந்திர பிடியில் சிறிலங்கா
பொறுப்புக்கூறல் பொறிமுறையில் சிறிலங்காவின் நழுவல் போக்குகளுக்கு இடமளிக்கப்போவதில்லை என உலகத்தமிழர் பேரவையின் உறுப்பினர்களிடம் அமெரிக்க இராஜதந்திர அதிகாரிகள் உறுதியளித்ததாக உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் கூறியுள்ளார்.
ஐபிசி தமிழ் வானொலியின் நெற்றிக்கண் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போது இவ்வாறு கூறிய அவர், சிறிலங்காவில் கடந்த காலங்களில் ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்பு நிகழ்ச்சிநிரலின் மீதான சர்வதேச பொறிமுறையில் அமைந்த பொறுப்புக்கூறல் தொடர்பில் அமெரிக்கா தொடர்ந்தும் கரிசனையோடு இருப்பதாகவும் அது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்தின் மீதான அழுத்தங்களை தொடர்ந்தும் மேற்கொள்ளப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதுமாத்திரமின்றி இந்த வருடம் ஜனவரி மாதமளவில் அமெரிக்காவின் பாதுகாப்பு சார் உயர்மட்டக்குழுக்கள் விஜயம் செய்திருந்தபோது சிறிலங்கவின் அரசியல் பொருளாதார நிலைகுலைவுகளை அவதானிக்க நேர்ந்ததாகவும், அது தொடர்பில் தாம் கரிசனைகொண்டிருப்பதாகவும் இந்த விடயங்கள் தொடர்பில் அதனை சாதகமாக மாற்றிக்கொள்வது தொடர்பில் அமெரிக்கா சிந்தித்து வருவாதாகவும் குறித்த சந்திப்பின்போது அமெரிக்கா சார்பில் கூறப்பட்டதாக சுரேந்திரன் கூறியுள்ளார்.
சர்வதேச நீதி தொடர்பிலான தொடர் இழுத்தடிப்புகள் விரைவில் தீர்க்கப்படும் எனவும் தமிழர்களுக்கான நீதிப்பொறிமுறையை அமெரிக்கா சரியான முறையில் கையாளும் என நம்புவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.