மாணவர்களுக்கிடையே மோதல் - திடீரென வாந்தி எடுத்து உயிரிழந்த மாணவன்
அம்பாந்தோட்டை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியின் போது இடம்பெற்ற மோதலில் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
லுனுகம்வெஹெர - மத்தல பகுதியில் கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி பாடசாலை விளையாட்டுப் போட்டியின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், தரம் 11 இல் கல்வி பயிலும் 15 வயதுடைய மாணவனுக்கும், 10ஆம் தரத்தில் பயிலும் 14 வயதுடைய மாணவனுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் கைகலப்பாக மாறிய நிலையில், அங்கிருந்த ஆசிரியர்கள் தலையிட்டு மோதலை கட்டுப்படுத்தியுள்ளனர்.
மூளையினுள் இரத்தக் கசிவு
பாடசாலை முடிந்து வீடு திரும்பிய 15 வயதுடைய மாணவன், திடீரென வாந்தி எடுத்ததோடு உடல்நலக் குறைபாட்டிற்கு உள்ளாகியுள்ளார்.

பெற்றோர் வினவியபோது, தான் பாடசாலையில் தவறி விழுந்ததாக மாணவன் கூறியதையத்து உடனடியாக அவர் லுனுகம்வெஹெர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும், நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் மேலதிக சிகிச்சைக்காக அம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலைக்கும், பின்னர் அங்கிருந்து காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டுள்ளார்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனையில் மாணவனின் மூளையினுள் இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
சரீரப் பிணை
தொடர்ந்து அவருக்கு அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பின்னர் மோதலில் ஈடுபட்ட மற்றைய மாணவன் லுனுகம்வெஹெர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேறிய பின்னர், மத்தல காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட மாணவனை திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, 5 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்தல காவல் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |