தேசபந்துவை பதவி நீக்கம் செய்யும் பிரேரணைக்கு கடும் எதிர்ப்பு!
எதிர் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்யும் பிரேரணை கொண்டுவரப்படும் விதம் நிலையியற் கட்டளைகளுக்கு முரணானது என்று கூறி, நாடாளுமன்ற விவகாரக் குழுவில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி, சிறிலங்கா பொதுஜன பெரமுன, புதிய ஜனநாயக முன்னணி ஆகிய கட்சிகளின் தலைவர்களே இவ்வாறு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
அதன்போது, கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக இதுபோன்ற ஒரு பிரேரணையைக் கொண்டுவருவதை தான் எதிர்க்கவில்லை என்றாலும், இந்தப் பிரேரணை கொண்டுவரப்பட்ட விதம் நிலையியற் கட்டளைகளுக்கு முரணானது என்பதால் அதனை நிராகரிப்பதாக தெரிவித்துள்ளார்.
நிலையியற் கட்டளை
அத்தோடு, நீதிமன்றங்களால் தீர்மானிக்கப்பட்ட ஒரு விடயத்தை விவாதிக்க முடியாது என்று நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகள் 91E தெளிவாகக் கூறுவதாகவும் கட்சித் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனினும், இந்த விவகாரம் குறித்து கருத்து வெளியிட்ட அரசாங்க செய்தித் தொடர்பாளர், நீதித்துறை மறுஆய்வுக்கு உட்பட்ட ஒரு விஷயத்தை விவாதிக்க முடியாது என்று நிலையியற் கட்டளைகள் கூறினாலும், அத்தகைய பிரேரணையை சபாநாயகரின் விருப்பப்படி விவாதிக்க முடியும் என்றும் நிலையியற் கட்டளைகள் தெளிவாகக் கூறுவதாக குறிப்பிட்டுள்ளார்.
முன்மொழிவு
இவ்வாறானதொரு பின்னணியில், காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு குழுவை நியமிக்கும் முன்மொழிவு எதிர்வரும் 8 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினால், தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கான முன்மொழிவு, சபாநாயகர் ஜகத் ஜகத் விக்ரமரத்னவிடம் சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
